1. Home
  2. தமிழ்நாடு

உலகின் அதிவேக ரயில் சீனாவில் அறிமுகம்..! மணிக்கு 450 கிமீ வேகத்தில் பயணிக்குமாம்

1

உலகின் அதிவேக ரயிலைச் சீனா தற்போது அறிமுகம் செய்துள்ளது. வேகம், எரிசக்தி பயன்பாடு, உள் இரைச்சல் குறைப்பு, பிரேக் செயல்பாடு உள்ளிட்டவற்றில் உலக அளவில் புதிய தரநிலைகளை இந்த ரயில் நிர்ணயித்திருக்கிறது.

புல்லட் ரயில் தொழில்நுட்பத்தில் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு வரை ஜப்பான்தான் முன்னணியில் திகழ்ந்தது. ஆனால் இப்போது சீனா உருவாக்கியுள்ள புல்லட் ரயில்கள் ஒட்டுமொத்த உலக நாடுகளின் கவனத்தையும் திருப்பி வருகின்றன.

அந்த வகையில் கடந்த வருடம் தென்கிழக்கு புஜியான் மாகாணத்தில் உள்ள முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் புல்லட் ரயில் சேவையைச் சீனா ஆரம்பித்திருந்தது. இந்த ரயில் கடலுக்கு மேலேயும் பயணிக்கும் என்பதுதான் இதனுடைய ஸ்பெஷாலிட்டியே.

தைவான் ஜலசந்தியின் மேற்கு கடற்கரையில் உள்ள புஜியன் நகரின் தலைநகர் ஃபுஜோ மற்றும் வணிக மையமான ஜியாமென் உட்பட 5 நகரங்களை இந்த ரயில் இணைக்கிறது. குறிப்பாக ஃபுஜோ-ஜியாமென் இடையே உள்ள 277 கி.மீத்தொலைவை இந்த ரயில் வெறும் 55 நிமிடங்களில் கடக்கிறது. அதேபோல, CR400 புல்லட் ரயில் மணிக்கு 350 கிலோமீட்டர் வேகத்தில் பயணம் செய்து வருகிறது.

இதுபோல 3 அதிவேக ரயில் சேவைகளைச் சீனா தற்போது கொண்டிருக்கிறது. இந்நிலையில் இன்னொரு மிகப்பெரிய சோதனை ஓட்டத்திற்கு சீனா தயாராகியுள்ளது… இதற்கு CR450 டல் என்று பெயரையும் வைத்திருக்கிறது. இந்தப் புல்லட் ரயிலின் ஸ்பெஷாலிட்டி என்னவென்றால், சோதனை ஓட்டத்தில் மணிக்கு 450 கிலோமீட்டர் வேகம்வரை இயக்கப்பட்டிருக்கிறது.

அந்தவகையில், உலகின் அதிவேக புல்லட் ரயில் என்ற சிறப்பையும் இந்த CR450 புல்லட் ரயில் பெறப்போகிறது. மேம்படுத்தப்பட்ட சிஆர்450 என்ற இந்தப் புல்லட் ரயில் நவீன தொழில்நுட்பங்களுடன் தயாரிக்கப்பட்டுள்ளது. இதனால் பயண நேர வெகுவாகக் குறையும் என்று சீனா நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சீன ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில், “சோதனை ஓட்டத்தின்போது மணிக்கு 450 கிமீ வேகத்தில் பயணித்து. சிஆர் 450 புதிய மைல்கல்லை எட்டியிருக்கிறது. வேகம், எரிசக்தி பயன்பாடு, உள் இரைச்சல் குறைப்பு, பிரேக் செயல்பாடு உள்ளிட்டவற்றில் உலக அளவில் புதிய தரநிலைகளை இந்த ரயில் நிர்ணயித்திருக்கிறது. தற்போது செயல்பாட்டில் உள்ள மணிக்கு 350 கிமீ வேகத்தில் பயணிக்கும் அதிவேக சிஆர்400 புல்லட் ரயிலைவிட இதன் வேகம் அதிகமாக உள்ளது. சிஆர் 450 ரயிலைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவர பல்வேறு கட்ட சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன” என்று தெரிவித்துள்ளது.

அந்தவகையில், மொத்தம் 47000 கிலோமீட்டர் தூரத்தை அதிவேக ரயில் போக்குவரத்தில் சீனா இணைத்துள்ளது… இதற்கான ஏற்பாடுகளைச் சீன ரயில்வே நிர்வாகம் ஜரூராகச் செய்து கொண்டிருக்கிறது.

சீனாவின் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் அடுத்தடுத்து புல்லட் ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டு வந்தாலும், இதுவரை லாபம் ஈட்டும் வகையில் எதுவும் அமையவில்லை. இருந்தாலும், நாட்டின் பொருளாதார மற்றும் சமூக மேம்பாடு, பயண நேரம் குறைப்பு, ரயில் வழித்தடங்களை ஒட்டிய தொழில்துறை மேம்பாடு போன்ற காரணங்களுக்காக இது போன்ற புல்லட் ரயில்கள் அறிமுகம் செய்யப்படுகிறதாம்.

இப்போதைக்கு சீனாவில் அதிக வருவாய் ஈட்டி தரும் புல்லட் ரயில் வழித்தடமாகப் பெய்ஜிங் – ஷாங்காய் அமைந்துள்ளது. இதுபோலவே, மற்ற வழித்தடங்களையும் மாற்றுவதற்கு உரிய நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

உலக நாடுகள் ஆர்வம்:

தாய்லாந்து, இந்தோனேசியா, செர்பியா உள்ளிட்ட நாடுகளுக்கும் அதிவேக ரயில்களைச் சீனா ஏற்றுமதி செய்துள்ளது. இப்படி, சீனா எடுத்துவரும் அடுத்தடுத்த முயற்சிகளைப் பார்த்த மற்ற நாடுகளும், புல்லட் ரயிலைப் பயன்பாட்டிற்கு கொண்டு வர ஆர்வம் காட்ட துவங்கியிருக்கின்றனவாம்.

Trending News

Latest News

You May Like