அதிர்ச்சியில் தொழிலாளர்கள்..! ஆந்திராவில் வேலை நேரம் 10 மணி நேரமாக அதிகரிப்பு...!

ஆந்திர தகவல் தொடர்புத் துறை அமைச்சர் பார்த்தசாரதி, "வணிகத்தை எளிமையாக்குவதன் ஒரு பகுதியாக தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலையில் வேலை நேரத்தை 9 மணி நேரத்தில் இருந்து 10 மணி நேரமாக அதிகரிக்க முடிவு செய்துள்ளோம். இதன் மூலம் மாநிலத்தில் முதலீடு அதிகரிக்கும்" என தெரிவித்தார்.
ஆந்திர பிரதேச தொழிற்சாலை சட்டப்படி, தொழிலாளர்களை 9 மணிநேரத்துக்கு மேல் பணியமர்த்த முடியாது. அதிலும் தொடர்ச்சியாக 5 மணிநேரம் பணியாற்றும்பட்சத்தில், 30 நிமிடம் இடைவெளி விடப்பட வேண்டும்.
இந்த நிலையில், வேலை நேரத்தை 9 மணி நேரத்தில் இருந்து 10 மணி நேரமாக அதிகரிக்க மாநில அரசு முடிவு செய்ததன் மூலம் நாளடைவில், இது 12 மணி நேரமாக அதிகரித்து விடுமோ என தொழிலாளர்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது.
இது தவிர கூடுதல் நேரப் பணி (ஓவர் டைம்), இரவு நேரப் பணியிலும் மாற்றம் கொண்டுவர ஆந்திர அரசு முடிவு செய்திருக்கிறது. ஆந்திராவில் தற்போது பெண்கள் இரவுப் பணிக்கு அனுமதிக்கப்படுகின்றனர். புதிய விதிமுறைப்படி, இரவு பணி பார்த்தால், ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே, ஆந்திராவில் தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலையில் வேலை நேரத்தை 10 மணி நேரமாக அதிகரிக்க மாநில அரசு முடிவு செய்ததற்கு கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் மாநில செயலர் வி. சீனிவாச ராவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பெரிய தொழில் நிறுவனங்களை சமாதானப்படுத்தும் வகையில், மத்திய அரசின் அழுத்தத்துக்கு உட்பட்டு ஆந்திர அரசு தொழிலாளர்களின் வேலை நேரத்தை அதிகரித்திருக்கிறது. ஏற்கெனவே மத்திய அரசின் தொழிலாளர் நலச் சட்டத்துக்கு எதிராக அடுத்த மாதம் 9-ஆம் தேதி நாடு முழுவதும் தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்து உள்ளனர்.
இந்தச் சூழலில் ஆந்திர அரசு தொழிலாளர்களின் வேலை நேரத்தை 9 மணி நேரத்தில் இருந்து 10 மணி நேரமாக அதிகரிக்க முடிவு செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலர் வி. சீனிவாச ராவ் கூறினார்.
தொழிலாளர்களின் உடல்நலனை பாதிக்கும்: மருத்துவர்
இதேபோல மருத்துவர் டி. செல்வகுமார் என்பவரும் ஆந்திர அரசின் முடிவுக்கு அதிருப்தி தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், "பணியாளர்களின் வேலை நேரத்தை அதிகரிப்பது அவர்களது உடல்நலனை பாதிக்கும். மேலும், செயல் திறனும் பாதிப்படையும். நிர்ணயிக்கப்பட்ட 8 மணி நேரத்தைக் கடந்து வேலை செய்யுமாறு மனிதர்களை நிரபந்திப்பது அறிவுபூர்வமான திட்டம் அல்ல" என தெரிவித்தார்.