1. Home
  2. தமிழ்நாடு

இப்படி கூட செய்யலாமா ? வேண்டாம் என சிலர் தூக்கி வீசிய பொருள்களைக் கொண்டு வாகனம் தயாரித்த தொழிலாளி..!

1

பட்டறை தொழிலாளியான ஈஸ்வரன், ஓய்வு நேரத்தில் பொழுதை வீணடிக்காமல் புதிய பொருள்களை உருவாக்குவதில் கவனம் செலுத்தி வருகிறார்.

வேளாண் கருவிகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்பதால் மண்வெட்டி, அரிவாள், களைக்கொத்து, கோடாரி ஆகியவற்றை எளிதில் தயார் செய்துவிடுகிறார் இவர்.

அரிவாள்மனை, தோசைக்கல், பணியாரச்சட்டி ஆகிய வீட்டு உபயோகப் பொருள்களும் இவரது கைவண்ணத்தில் உருவாகின்றன. பட்டறையில் பணியில்லாத நாள்களில் இந்தப் பொருள்களை அருகில் உள்ள கிராமங்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்கிறார் ஈஸ்வரன்.

இதற்காகவே தனது ஊர் எல்லையில் பட்டறையை அமைத்துள்ளார். தொடக்கத்தில் மூன்று சக்கர மிதிவண்டியில் பொருள்களை ஏற்றிச் செல்வாராம். நிறைய ஊர்களுக்குச் செல்ல விரும்பியபோதும், மிதிவண்டியில் செல்வதால் அது சாத்தியமாகவில்லை.

இதனால் வேகத்தை அதிகரிக்க தனது மிதிவண்டியில் இருசக்கர வாகனத்தின் இன்ஜினை பொருத்தியுள்ளார். இதனால் ஓரளவு வேகம் கிடைத்துள்ளது.

இந்நிலையில், சிறிய ரக வாகனம் (மினி வேன்) ஒன்றை உருவாக்குவது என முடிவு செய்துள்ளார் ஈஸ்வரன்.இதையடுத்து, பழைய எஃக்கால் ஆன பழைய கட்டில்களை வாங்கி, அவற்றைத் தகடுகளாக மாற்றி தனது வாகனத்தின் சுற்றுவட்ட பகுதியை அமைத்துள்ளார்.பின்னர் பழைய இருசக்கர வாகனத்தின் இஞ்ஜினை வாங்கிப் பொருத்தியுள்ளார். மேலும் பழைய சாமான்களை விற்கும் கடைகளில் இருந்து ஸ்டியரிங், டயர்கள் ஆகியவற்றை வாங்கி பொருத்தியதும் அவரது வாகனம் முழு வடிவம் பெற்றது.

தற்போது இந்த வாகனத்தைப் பயன்படுத்தி பல்வேறு ஊர்களுக்கு தனது பொருள்களை எடுத்துச் செல்ல முடிவதாக உற்சாகத்துடன் சொல்கிறார் ஈஸ்வரன்.இந்த வாகனம் லிட்டருக்கு 30 கிலோ மீட்டர் தூரம் செல்கிறது. ஈஸ்வரனின் கைவண்ணம் குறித்து கேள்விப்பட்ட மக்கள் அவரது பொருள்களை வாங்கி ஆதரவு அளித்து வருகின்றனர்.

“பலர் என்னுடன் செல்ஃபி படம் எடுத்துக்கொள்ள விரும்புகின்றனர். அவற்றை சமூக வலைத்தளங்களிலும் பகிர்வதால் என்னைப் பற்றி அறிந்தவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது,” என்று சொல்லும் ஈஸ்வரன், தனது வாகனத்தை உருவாக்க ரூ.80,000 செலவானதாகச் சொல்கிறார்.

அவரது வாகனம் 15 நாள்களில் உருவாகிவிட்டது. 250 கிலோ எடை கொண்ட பொருள்களை இதில் எடுத்துச்செல்ல முடியும் என்றும் பொருள்கள் இல்லை என்றால் நான்கு பேர் பயணம் செய்ய முடியும் என்று சொல்லும் ஈஸ்வரனை, அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கிராமத்து விஞ்ஞானி என்று குறிப்பிடுகின்றனர்.
 

Trending News

Latest News

You May Like