வென்றார் எடப்பாடி! புஸ்ஸான ஓபிஎஸ்ஸுன் ‘தர்ம யுத்தம்’!

அதிமுகவின் அடுத்த முதல்வர் வேட்பாளர் யார் என்று இன்று அறிவிப்பதாக சொல்லியிருக்கிறார்கள். தமிழகத்தில் மே மாதம் சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில், அதிமுகவில் அடுத்த முதல்வர் வேட்பாளர் யார் என்ற சர்ச்சை தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், நேற்று நள்ளிரவு வரையிலும் ஓபிஎஸ் முரண்டு பிடித்துக் கொண்டிருந்ததால், இன்று அறிவிக்கப்படாமல் தள்ளி போவதற்கான வாய்ப்புகளே அதிகம் இருப்பதாக கழக கண்மணிகள் சொல்கிறார்கள்.
விடிய விடிய நடைப்பெற்ற சமாதானப் பேச்சு வார்த்தைகளில், அதிமுகவின் வழிகாட்டு குழு எந்தவொரு முடிவுக்கு எட்டவில்லை என்பதால் கழக கண்மணிகளே சோர்ந்து தான் போயிருக்கிறார்கள். மகனுக்கு மந்திரி பதவி, தனக்கு கட்சியின் பொது செயலாளர் பதவி என்று முரண்டு பிடித்துக் கொண்டிருந்த ஓபிஎஸ், இவற்றோடு பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டுவருவதில் கொஞ்சமும் ஈடுபாடு காட்டாமல் முரண்டு பிடிப்பதாகச் சொல்கிறார்கள்.
இன்று முதல்வர் வேட்பாளர் யார் என்று அறிவிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு தான் என்றாலும் அதிமுகவின் பொதுக்குழு தேதியை இன்று நிச்சயம் அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
தொடர்ந்து அதிமுக அமைச்சர்கள் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் என அடுத்தடுத்து சந்தித்து ஆலோசனை செய்தாலும், ஓபிஎஸ்ஸுக்கு பெருமளவில் கட்சிக்குள் ஆதரவு இல்லை என்கிற நிஜம் வெளியே வந்ததும், துவண்டு தான் போனாராம் ஓபிஎஸ். எப்படியாவது எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று தான் கட்சிக்குள் பெரும்பான்மையானோர் போராடி வருகின்றனர். கடந்த முறை ஓபிஎஸ், மெளன சாமியாராய் ஜெயலலிதா சமாதியில் உட்கார்ந்து, தர்ம யுத்தம் என்று ஸ்டண்ட் அடித்த போது கூடிய ஆதரவு கரங்கள் இந்த முறை பெரிய அளவில் கூடாமல் மிஸ் ஆனது, ஓபிஎஸ்ஸை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது என்கிறார்கள்.
தனக்கு அந்தளவுக்கு மாஸ் கூடாதது பெரும் வருத்தத்தை ஏற்படுத்த, தொடர்ந்து ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வந்த ஓபிஎஸ்.., தான் முதல்வர் வேட்பாளர் என்று போர்க்கொடி உயர்த்துவதை கட்சியில் பெரும்பான்மையானவர்கள் ரசிக்கவில்லை என்கிற நிஜத்தைப் புரிந்துக் கொண்டதாக கூறுகிறார்கள். பொதுகுழு உறுப்பினர்கள் என்று எல்லா பக்கத்திலும் ஓபிஎஸ்ஸை விட எடப்பாடிக்கு தான் கட்சிக்குள் ஆதரவு அதிகமிருப்பது ஓபிஎஸ்ஸை அதிர வைத்திருக்கிறது என்கிறார்கள். இன்னும் ஒருபடி மேலே போய், வேண்டுமானால் கட்சியை விட்டு ஓபிஎஸ் தனியே கிளம்பட்டும் என்கிற ரீதியில் பேசியிருக்கிறார்கள் உறுப்பினர்கள்.
அதிமுகவை விட்டு வெளியே சென்றால், தன்னை தன்னுடைய நிழல் கூட மதிக்காது என்பதை நன்கு உணர்ந்திருக்கிறார் ஓபிஎஸ். அதனால், தற்போது நிபந்தனைகளை குறைத்துக் கொண்டு தனக்கு பொது செயலாளர் பதவி, மகனுக்கு மந்திரி பதவி என்று டீல் பேசியிருப்பதாகவும் பேச்சு அடிபடுகிறது.
விடிய விடிய நேற்று நடந்த பேச்சுவார்த்தையிலும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லையாம். ஆனாலும், ஓபிஎஸ் கட்சியை விட்டு வெளியேறினால் கட்சிக்கு கடுகளவு கூட பாதிப்பில்லை என்கிற ரீதியில் தான் கழக நிர்வாகிகள் பேசுகின்றனர். அவர் கட்சியை விட்டு வெளியே செல்வதை தடுக்கும் நிலையிலும் யாரும் இல்லை என்கிற நிஜம், ஓபிஎஸ்ஸை கலங்க செய்திருக்கிறதாம். இப்போதைக்கு சரியென தலையசைத்து, மீண்டும் ஒரு தர்ம யுத்தத்திற்கு சமயம் பார்த்துக் கொண்டிருக்கிறாராம் ஓபிஎஸ்.