மகளிர் உரிமை தொகை இந்த மாதம் கூடுதலாக சில பெண்களுக்கு வழங்கப்பட வாய்ப்பு..?

அறிஞர் அண்ணாவின் 115-வது பிறந்தநாளான செப்டம்பர் 15 அன்று குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தலா ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் முறைப்படி தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தை பிற மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர். இந்த திட்டம் அமலுக்கு வந்த நிலையில் குடும்ப தலைவிகளின் வங்கி கணக்கில் 1,000 ரூபாய் வரவு வைக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு முழுவதும் சுமார் 1.63 கோடி பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் 60 லட்சம் பேர் பல்வேறு காரணங்களுக்காக நிராகரிக்கப்பட்டனர். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து ஆதரவு தெரிவித்தாலும் ஒரு சிலர் தனக்கு மகளிர் உரிமை தொகை கிடைக்கவில்லை என்று புலம்பி வந்தனர்.
இதனையடுத்து விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்கள் மேல்முறையீடு செய்வதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட பெண்கள் செப்டம்பர் 18-ம் தேதி முதல் 30 நாட்களுக்கு இ-சேவை மையங்கள் மூலம் வருவாய் கோட்டாட்சியருக்கு மேல்முறையீடு செய்யலாம். மேல்முறையீட்டு விண்ணப்பங்கள் 30 நாட்களுக்குள் தீர்வு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், கலைஞர் மகளிர் உரிமை தொகை இந்த மாதம் கூடுதலாக சில பெண்களுக்கு வழங்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக, அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளைப் பூர்த்தி செய்யாத விண்ணப்பங்களும், தகுதியின்மைக்கு உள்ளான விண்ணப்பங்களும் ஏற்கப்படவில்லை. இவ்வாறு ஏற்கப்படாத விண்ணப்பதாரர்கள் மேல்முறையீடு செய்யலாம் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, பெண்கள் பலரும் மேல்முறையீடு செய்து வருகின்றனர். அதில், சில விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளன என்பதால், அப்பெண்களுக்கும் இந்த மாதமே கலைஞர் உரிமை தொகை கிடைக்க வாய்ப்புள்ளது. இதனால், கலைஞர் மகளிர் உரிமை தொகையை இந்த மாதம் கூடுதலாக சில பெண்கள் பெற வாய்ப்புள்ளது.