குழந்தை வரம் வேண்டி ’ரத்த சோறு’ சாப்பிட்ட பெண்கள்..!
சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே, வீரகனுாரில் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் அமைந்துள்ளது . இங்கு நடைபெற்ற மயானக் கொள்ளை விழாவில் பால் குடம் ஊர்வலத்துடன் கோலாகலமாக விழா தொடங்கப்பட்டது. காடு வளைப்பு, காளி புறப்பாடு, வள்ளாளராஜன் கோட்டை இடித்து, மயான சூறை இடுதல் நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடத்தப்பட்டது. இதில் அலங்கரிக்கப்பட்ட அம்மன், வீரபத்திர சுவாமி, பாவடைராயன் சுவாமிகள் புஷ்ப தேர் அலங்காரத்தில், சுவேத நதிக்கு கொண்டு செல்லப்பட்டது.
சுவேத நதி மண்ணில் பெரியாண்டிச்சி அம்மன் சுவாமி உருவம் வடிவமைத்து, 10க்கும் மேற்பட்ட ‘கிடா’, 20க்கும் மேற்பட்ட கோழிகள் பலி கொடுக்கப்பட்டன. பக்தர்கள் தானியங்கள் கலந்து பொங்கல் வைத்து எடுத்து வந்னர். இந்த பொங்கலில் பலி கொடுத்த ஆடுகளின் ரத்தங்கள் பீய்ச்சி அடிக்கப்பட்டன. காளி உருவம் அணிந்து வந்த பூசாரி பூங்கரகம் எடுத்து ஆடி வந்தார். மயான கொள்ளை விழாவில் ரத்தம் கலந்த சாப்பாட்டை குழந்தை வரம் கேட்டு மடிப்பிச்சை எடுத்த 100க்கும் மேற்பட்ட பெண்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. அத்துடன் தீராத நோய்கள், பல்வேறு பிரச்னைகள் இருப்பவர்களும் இந்த ரத்த சாப்பாட்டை வாங்கி சாப்பிட்டனர்.
ரத்த கலந்த சோற்றை குழந்தை பாக்கியம் இல்லாத குழந்தைகள், தீராத நோய், முனிபிடித்தவர்கள் இதனை வாங்கி சாப்பிட்டனர். ரத்த சோறு சாப்பிட்டால் உடனே வேண்டுதல் நிறைவேறும் என பக்கதர்களால் நம்பப்படுகிறது, இதனால் ரத்த சோற்றை வாங்க ஏராளமான பெண்கள் ஆர்வத்துடன் வாங்கி சாப்பிட்டனர்.