சுட்டெரிக்கும் வெயிலில் மண்டியிட்டு பெண்கள் மண் சோறு சாப்பிட்டு நூதன வழிபாடு..!

இந்திய கலாச்சாரத்தில் திருமண பந்தம் மற்றும் குழந்தை பாக்கியம் ஆகிய இரண்டுமே மக்களின் உணர்வோடு மிகவும் பின்னி பிணைந்தவை. எவ்வளவு செல்வம் இருந்தாலும் உரிய காலத்தில் திருமணம் மற்றும் குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை என்றால் அவர்கள் மனதளவில் மிகவும் சோர்வடைந்து விடுவார்கள்.அதிலும் குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதி மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் மனக்கவலைகளை அவ்வளவு எளிதாக வார்த்தைகளில் விவரிக்க முடியாது.
குழந்தை பாக்கியத்துக்காக எவ்வளவு கடினமான வேண்டுதல்களாக இருந்தாலும் பெண்கள் மனம் தளராமல் இறங்கிவிடுவார்கள்.அப்படி ஒரு நூதன வேண்டுதல் தான் அரியலூரில் நடந்துள்ளது. அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ளது சிறுகடம்பூர் கிராமம். அங்குள்ள முருகன் கோயிலில் பங்குனி மாத திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. கோயில் திருவிழாக்கள் என்றால் பக்தி, கொண்டாட்டம் ஆகியவற்றுடன் நூதன வழிபாடும் இருக்கதானே செய்யும்.
அப்படிதான் அங்கு சுட்டெரிக்கும் வெயிலில் பெண்கள், குழந்தை வரத்துக்காக மண் சோறு சாப்பிட்டுள்ளனர். மண் சோறு நிகழ்வு என்றவுடன் அன்னதானத்தில் சிறு பகுதியை மட்டும் மண் சோறாக சாப்பிடுவது போல அல்ல. தரை நிறைய போட்டுள்ள உணவை.. மண்டியிட்டு.. கைகளை கட்டிக் கொண்டு சாப்பிட வேண்டும்.
குழந்தை வரத்துக்காக திருமணமான பெண்கள் மற்றும் அவர்களின் தாய் உள்ளிட்ட உறவினர்கள் மேற்கொண்ட இந்த மண்சோறு வேண்டுதலை பார்த்தாலே கடினமான மனதுள்ளவர்கள் கூட கண்ணீரில் கலங்கி போவார்கள். அரியலூர் சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான பெண்க்ள கலந்து கொண்டு குழந்தை வரத்துக்காக மண் சோறு சாப்பிட்டனர்.