1. Home
  2. தமிழ்நாடு

காதலனை சிக்க வைக்க நாடு முழுவதும் 21 வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பெண் ஐடி ஊழியர்; சிக்கியது எப்படி?

1

அகமதாபாத்தில் உள்ள தனியார் பள்ளிக்கு கடந்த சில தினங்களுக்கு முன் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. தகவலறிந்த குஜராத் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிரமாக விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அது புரளி என தெரியவந்தது. இதையடுத்து அகமதாபாத்தில் இருக்கும் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்திற்கு அடிக்கடி வெடிகுண்டு மிரட்டல் வந்து கொண்டிருந்தது.

நரேந்திர மோடி ஸ்டேடியத்திற்கு மட்டும் 13 முறை இந்த வெடிகுண்டு மிரட்டல் வந்திருந்தது. அதோடு அகமதாபாத்தில் உள்ள ஜெனீவா லிபரல் பள்ளிக்கு நான்கு முறையும், திவ்ய ஜோதி பள்ளிக்கு மூன்று முறையும், பி.ஜெ.மருத்துவ கல்லூரிக்கு ஒரு முறையும் வெடிகுண்டு மிரட்டல் வந்திருந்தது. இதனால் அனைத்து போலீஸாரும் ஒருங்கிணைந்து இந்த வெடிகுண்டு மிரட்டல் குறித்து தீவிரமாக விசாரித்து வந்தனர். பெரும்பாலான கொலை மிரட்டல்கள் போலி இ-மெயில் ஐ.டியில் இருந்து வந்திருந்தது.

இதையடுத்து அகமதாபாத்தில் பி.ஜெ.மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் ஏர் இந்தியா விமானம் மோதி விபத்துக்குள்ளான பிறகும் ஒரு வெடிகுண்டு மிரட்டல் வந்திருந்தது. இந்த மெயில் மிரட்டலை தொடர்ந்து குஜராத் சைபர் பிரிவு போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பெண் சென்னையை சேர்ந்த ஐ.டி.பெண் ஊழியர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்தனர்.

இதுதொடர்பாக அகமதாபாத் குற்றப்பிரிவு இணை கமிஷனர் கூறியதாவது;

தொடர்ச்சியாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தொடர்பாக சென்னையை சேர்ந்த ரெனே ஜோஷில்டா என்ற பெண் என்ஜினீயர் கைது செய்யப்பட்டார். அவர் போலி இ-–மெயில் முகவரிகளை பயன்படுத்தி தொடர்ச்சியாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வந்தார். அவர் திவிஜ் பிரபாகர் என்பவரை ஒரு தலைபட்சமாக காதலித்து வந்துள்ளார். ஆனால் பிரபாகர் கடந்த பிப்ரவரி மாதம் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனால் அவரைப் பழிவாங்க அவரது பெயரை பயன்படுத்தி அவரை இதில் சிக்க வைக்கவேண்டும் என்பதற்காக போலி இ-மெயில் ஐ.டி, டார்க் வெப் போன்றவற்றை பயன்படுத்தி தனது அடையாளத்தை மறைத்து ஜோஷில்டா வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வந்தார்.

குஜராத் மட்டுமல்லாது மராட்டிய மாநிலம் உள்பட 11 மாநிலங்களுக்கும் அவர் 21 முறை வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். தனது காதலை ஏற்காத சக ஊழியரை பழி வாங்குவதற்கு இதனைச் செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார் என அவர் கூறினார்.

போலி இமெயில் பயன்படுத்திய கணினியிலேயே தனது ஒரிஜினல் இமெயில் கணக்கையும் பயன்படுத்தியதால் போலீசில் அவர் சிக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like