பெண் டாக்டர் பலாத்காரம் செய்து கொலை : விசாரணை தேதியை குறித்த உச்சநீதிமன்றம்..!
மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில் ஆர்ஜி கார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை இரண்டாம் ஆண்டு படித்த 31 வயது பயிற்சி பெண் டாக்டர், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக போலீஸ் நண்பர்கள் குழுவைச் சேர்ந்த சஞ்சய் ராய் கைது செய்யப்பட்டார். இது குறித்து சிபிஐ விசாரித்து வருகிறது.
பயிற்சி பெண் டாக்டர் மரணத்திற்கு நீதி கேட்டும், குற்றவாளி மீது விரைந்து நடவடிக்கை எடுக்கக் கோரியும் டில்லி, பெங்களூரு, ஹைதராபாத் உட்பட நாட்டின் பல்வேறு நகரங்களில் பயிற்சி டாக்டர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று அவசர சிகிச்சையை தவிர்த்து மற்ற சேவைகளை புறக்கணித்து நாடு முழுவதும் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், இந்த சம்பவத்தை தாமாக முன்வந்து விசாரிக்க போவதாக உச்சநீதிமன்றம் அறிவித்து உள்ளது. இந்த விவகாரத்தை, வரும் செவ்வாய்கிழமை(ஆக.,20) அன்று தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரணை நடத்துகிறது.