1. Home
  2. தமிழ்நாடு

பெண் மருத்துவர் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு...நான்கு பேருக்கு தலா 20 ஆண்டுகள் சிறை!

1

வேலூரில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த பெண் மருத்துவர் மற்றும் அவருடைய ஆண் நண்பர் ஆகியோர் கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் 16 -ம் தேதி காட்பாடி பகுதியில் உள்ள திரையரங்கில் படம் பார்த்துவிட்டு நள்ளிரவில் மீண்டும் மருத்துவமனைக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது காட்பாடி பகுதியில் இருந்து செல்வதற்காக ஆட்டோ ஒன்றில் ஏறியுள்ளனர். அந்த ஆட்டோவில் ஏற்கனவே ஐந்து இளைஞர்கள் கஞ்சா போதையில் இருந்துள்ளனர். வேலூர் புதிய பேருந்து நிலையம் வரை வந்த ஆட்டோ திடீரென இடது புறம் திரும்பி மருத்துவமனைக்கு செல்லாமல் பாலாற்றை நோக்கி சென்றது.

அந்த கும்பல் பெண் மருத்துவர், அவருடைய ஆண் நண்பர் இருவரையும் கத்திமுனையில் மிரட்டியது. ஆண் நண்பரின் கழுத்தில் கத்தியை வைத்து பெண் மருத்துவரை ஐந்து பேரும் பாலியல் வன்கொடுமை செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து பணம் ரூ 40,000் மற்றும் நகை, செல்போனை ஆகிவற்றையும் பறித்துக்கொண்டனர். பின்னர் அந்த கும்பல் இருவரையும் அங்கேயே விட்டுவிட்டு தப்பி சென்றது.

இந்த கொடூர சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட பெண் மருத்துவர் ஆன்லைன் மூலமாக வேலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த வேலூர் வடக்கு காவல் துறையினர், வேலூர் சத்துவாச்சாரி வா.உ.சி நகர் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பார்த்திபன், கூலி தொழிலாளி மணிகண்டன்(எ)மணி, பரத்(எ) பாரா, சந்தோஷ் (எ)மண்டை மற்றும் 17 வயது சிறுவன் உட்பட 5 பேரை கைது செய்தனர

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து செல்ஃபோன், பணம், நகை மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய ஆட்டோ ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணைக்கு பிறகு, இவர்களில் பார்த்திபன், பாலா (எ) பரத், மணிகண்டன் ( எ) மணி, சந்தோஷ் (எ) மண்டை மற்றும் ஒரு சிறுவன் ஆகிய ஐந்து பேர் வேலூர் மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதியிடம் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

குற்றத்தில் தொடர்புடைய சிறுவன் சென்னையில் உள்ள சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டார். இந்த நிலையில் 2022 ஏப்ரல் 15-ம் தேதி பெண் மருத்துவர் பாலியல் வழக்கில் சம்பந்தப்பட்ட மணிகண்டன், சந்தோஷ் பார்த்திபன், பரத் ஆகிய நான்கு பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.

பின்னர் இந்த வழக்கு, மகளிர் நீதிமன்றத்திலிருந்து மகளிர் விரைவு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு இரண்டு ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வந்தது. வழக்கில் சிறப்பு அரசு வழக்கறிஞர் சந்தியா ஆஜராகி வாதாடினார். இந்த நிலையில் இந்த வழக்கின் மீதான தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது.

இந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட பார்த்திபன், பரத்,சந்தோஷ் குமார் ,மணிகண்டன் ஆகிய நான்கு பேருக்கும் தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார். பின்னர் அவர்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Trending News

Latest News

You May Like