1. Home
  2. தமிழ்நாடு

உஷாரய்யா உஷாரு..! ஆவினில் வேலை வாங்கித் தருவதாக 30 லட்சம் வரை மோசடி..!

1

குமரி மாவட்டம் பேயோடு சந்திப்பை சேர்ந்தவர் ரெங்கசாமி (வயது 61). இவர் நாகர்கோவிலில் உள்ள ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு 1-வது கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

நான் பேயோடு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் பால் விற்பனையாளராக வேலை பார்த்து 2019-ம் ஆண்டு பணி ஓய்வு பெற்றேன். எனக்கும், குமரி மாவட்ட ஆவின் பால் உற்பத்தியாளர் ஒன்றிய இளநிலை செயலாளர் அய்யப்பன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. அப்போது புதுக்கோட்டை பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றியத்தில் மேலாளர் பணியிடம் காலியாக உள்ளதாகவும், அதை என் மகனுக்கு பெற்று தர ரூ.30 லட்சம் தரவேண்டும் என்றும் கூறினார். பின்னர் அய்யப்பன் மற்றும் கோவை மாவட்ட ஆவின் பால்உற்பத்தியாளர் ஒன்றிய பொறியியல் பிரிவு துணை மேலாளர் சகாயம், குமரி மாவட்ட கூட்டுறவு ஒன்றிய இளநிலை செயலாளர் பழனி, ராமவர்மபுரத்தை சேர்ந்த சரஸ்வதி ஆகியோர் சேர்ந்து மேலாளர் பணி கட்டாயம் கிடைக்கும் என்று கூறினர்.

இதை நம்பி நான் ரூ.30 லட்சத்தை பல தவணைகளாக கொடுத்தேன். பின்னர் கடந்த 7-2-2020 அன்று புதுக்கோட்டை மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றிய மேலாளர் பணிக்கான எழுத்து தேர்வு புதுக்கோட்டை அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. அதில் என் மகன் பங்கேற்று தேர்வு எழுதினார்.

ஆனால் அவர்கள் கூறியது போல வேலை வாங்கி தரவில்லை. பணத்தை பெற்றுக் கொண்டு மோசடி செய்து விட்டனர். தற்போது நான் உடல்நலக்குறைவு காரணமாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறேன். எனவே பணத்தை திருப்பி கேட்டேன். ஆனால் பணத்தை தர மறுக்கிறார்கள். மேலும் பணத்தை கேட்டால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டுகிறார்கள். எனவே அவர்கள் மீது நடவடிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். நான் கொடுத்த பணத்தையும் பெற்று தரவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

இந்த மனு மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட குற்றப்பிரிவு போலீசுக்கு கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி அய்யப்பன் உள்ளிட்ட 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Trending News

Latest News

You May Like