உஷாரய்யா உஷாரு..! இந்த மெசேஜ் அனுப்பினால் இனி ஜெயில் தான்..!
தெரியாத ஒரு பெண்ணுக்கு "நீ மெலிதாக இருக்கிறாய், மிகவும் புத்திசாலியாகவும், அழகாகவும் இருக்கிறாய், எனக்கு உன்னைப் பிடிக்கும்" போன்ற செய்திகளை அனுப்புவது ஆபாசமானது என்று மும்பை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
முன்னாள் பெண் கவுன்சிலருக்கு, ஒருவர் வாட்ஸ்அப்பில் ஆபாச குறுந்தகவல் அனுப்பி தொல்லை கொடுத்து இருந்தார். இதுதொடர்பான வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு 2022-ம் ஆண்டு முன்னாள் பெண் கவுன்சிலருக்கு தொல்லை கொடுத்தவருக்கு 3 மாதம் ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தது.
இதை எதிர்த்து அந்த நபர் மும்பை செசன்ஸ் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தார். அந்த மனுவில் அவர், அரசியல் முன் விரோதம் காரணமாக தனது மீது பொய்யான வழக்கு போடப்பட்டதாக கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி டி.ஜி. தோப்லே முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அவர், "இரவு 11 மணி முதல் நள்ளிரவு 12.30 வரை பெண் கவுன்சிலருக்கு வாட்ஸ்அப்பில் 'நீங்கள் அழகானவர், நீங்கள் நல்ல நிறமாக உள்ளீர்கள், எனக்கு 40 வயது, உங்களுக்கு திருமணம் ஆகிவிட்டதா?, உங்களை எனக்கு பிடிக்கும்' போன்ற குறுந்தகவல்கள், படங்கள் அனுப்பப்பட்டு உள்ளது.
இரவு நேரத்தில் முன்பின் தெரியாத பெண்ணுக்கு 'நீங்கள் அழகானவர்' போன்ற குறுந்தகவல்கள் அனுப்புவது ஆபாசம்தான். எந்த திருமணமான பெண்ணும் அல்லது அவரது கணவரும் இதுபோன்ற வாட்ஸ்அப் குறுந்தகவல்கள், ஆபாச படங்களை சகித்து கொள்ள மாட்டார்கள்" என கூறினார்.
மேலும் முன்னாள் பெண் கவுன்சிலருக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பி தொல்லை கொடுத்தவருக்கு மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு வழங்கிய தண்டனையை உறுதி செய்து செசன்ஸ் கோர்ட்டு நீதிபதி உத்தரவிட்டார்.
.png)