வரும் சட்டமன்ற தேர்தலில் அமமுக யாருடன் கூட்டணி? ஓப்பனாக சொன்ன டிடிவி தினகரன்
டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் பேசியதாவது , “உணர்ச்சி மிகுதி காரணமாக கடந்த ஒரு வருடமாக மறைந்த அரசியல் தலைவர்கள் குறித்தும், மற்ற கட்சித் தலைவர்கள் குறித்தும் சீமான் தரக்குறைவாக பேசுவது வருத்தமளிக்கிறது. அதனை சீமான் சரிசெய்துகொள்ள வேண்டும்.
தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சந்தி சிரிக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். காவல் துறை ஏவல் துறையாக பயன்படுத்தப்படுகிறது. பட்டி தொட்டியெல்லாம் போதைப் பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது. மாணவர்களை குறிவைத்து போதை மருந்து வியாபாரம் நடக்கிறது. இளைய சமுதாயம் போதைக்கு அடிமையாகிக் கொண்டுள்ளது.
ஆனால், திமுக அரசு எதைப் பற்றியும் கவலைப்படாமல் பண நாயகத்தை நம்பி தேர்தலில் வெற்றி பெற்றுவிடலாம் என்று நினைக்கிறார்கள். 2021ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி மீது மக்களுக்கு இருந்த வெறுப்பின் காரணமாக திமுக ஆட்சிக்கு வந்தது. இப்போது இபிஎஸ் ஆட்சியை விட திமுக ஆட்சி மீது மக்கள் வெறுப்பில் உள்ளனர். அதனை 2026 சட்டமன்றத் தேர்தலில் மக்கள் வெளிப்படுத்துவார்கள்” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து, “ஜனநாயக நாட்டில் கட்சி ஆரம்பிக்க, கொள்கை மற்றும் கோட்பாடுகளை வெளியிட, தேர்தலை சந்திக்க அனைவருக்கும் உரிமை உள்ளது. அதனை உற்று நோக்கி மக்கள் தான் தீர்ப்பு தருவார்களே தவிர, விஜய் கட்சி ஆரம்பித்தது குறித்து கருத்து சொல்வது நாகரீகமாக இருக்காது” என்றார்.
உதயநிதி டி-ஷர்ட் விவகாரம் தொடர்பான கேள்விக்கு, “உதயநிதி ஸ்டாலின் அவர் கட்சி சார்ந்த சின்னத்தை தானே டி ஷர்ட்டில் போட்டுள்ளார். அரசு ஊழியர்களில் இரண்டு பிரிவு இருப்பதாக கருதுகிறேன். ஒன்று மக்களால் வாக்களித்து தேர்வு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள். மற்றவர்கள் நியமனம் செய்யப்பட்ட அரசு ஊழியர்கள். இது யாருக்கான விதி என்று தெரியவில்லை. ஆகவே, நீதிமன்றம் சரியான முடிவு எடுக்கும் என நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.
அத்துடன், 2026 சட்டமன்றத் தேர்தலிலும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தான் அமமுக இடம்பெறும் என டிடிவி தினகரன் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.