உதயநிதிக்கு கூடுதல் பொறுப்பு வருமா ? வரும் 13-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம்..!
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 27-ம் தேதி அமெரிக்கா செல்ல உள்ளார். அமெரிக்கா செல்லும் முதல்வர் கூகுள் நிறுவன செயல் அதிகாரி உட்பட பல்வேறு தொழில் அதிபர்களை சந்திப்பதோடு அமெரிக்கா வாழ் தமிழர்களையும் சந்திக்க திட்டமிட்டுள்ளார்.
இந்நிலையில், வரும் ஆகஸ்ட் 13-ம் தேதி காலை 11 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற இருக்கிறது. இதில் முதல்வரின் வெளிநாட்டு பயணத்திற்கு ஒப்புதல் அளிக்கப்படும். மேலும், பல்வேறு முக்கிய தொழில் நிறுவனங்கள், திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், முதலமைச்சர் வெளிநாடு செல்லும்போது அமைச்சரவையின் ஒப்புதல் பெற வேண்டியது வழக்கமான நடைமுறையாக உள்ளது. அதன்படி, முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளிக்கவுள்ளது.
முதலமைச்சரின் ஒவ்வொரு வெளிநாட்டு பயணத்தின்போதும் அமைச்சரவை மாற்றம் தொடர்பான தகவல்கள் வெளியாவது வழக்கமாக உள்ளது. அத்துடன் துணை முதல்வராக உதயநிதி நியமிக்கப்படுவார் என்றும் கூறப்படும். எனினும் இதுகுறித்து அண்மையில் விளக்கமளித்த முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வராக உதயநிதி நியமிக்கப்படுவது குறித்த கோரிக்கைகள் வலுத்திருக்கின்றன. ஆனால் பழுக்கவில்லை என்று கருணாநிதி பாணியில் பதிலளித்தார். இதனால், இந்த முறை துணை முதல்வர் நியமனம் இருக்க வாய்ப்பில்லை.
எனினும் அமைச்சர்களில் சிலர் மாற்றப்படலாம் என்று கூறப்படுகிறது. போக்குவரத்து, மின்சாரத் துறை, ஆதிதிராவிடர் நலத்துறைகளில் மாற்றங்கள் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.