1. Home
  2. தமிழ்நாடு

இப்படி கூட நடக்குமா ? இளம்பெண் மரணத்தில் ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட்..!

1

சென்னையை சேர்ந்தவர் பாஸ்கர். இவரது மனைவி வரலட்சுமி தம்பதிக்கு நித்யா (26) உள்ளார். இவர் கடந்த 2 1/2 ஆண்டுகளாக தனியாக அறை எடுத்து தங்கி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, கொடுங்கையூர் பகுதியை சேர்ந்த பாலமுருகன் என்பவர் உடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது காதலாக மாறிய நிலையில் இருவரும் அம்பத்தூரில் வீடு வாடகைக்கு எடுத்து லிவிங் டுகெதரில் வசித்து வந்துள்ளனர்.

கடந்த இரு மாதங்களுக்கு முன்பு அம்பத்தூரில் இருந்து, கொடுங்கையூரில் உள்ள டீச்சர்ஸ் காலனிக்கு வீடு மாற்றி வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 5 ஆம் தேதியன்று வீட்டிற்கு பெற்றோர் வர இருப்பதாகவும், அதனால் வீட்டிற்கு வர வேண்டாம் என்றும் நித்யா பாலமுருகனை வெளியே அனுப்பி வைத்துள்ளார். பிறகு மீண்டும் பாலமுருகன் அன்று மாலை வந்து பார்த்தபோது நித்யா மயங்கிக் கிடந்ததாக கருதினார். உடனே பாலமுருகன் அருகில் இருந்த மருத்துவமனைக்கு நித்யாவை கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் நித்யா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக தகவலறிந்து கொடுங்கையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நித்யாவின் மரணம் குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும், நித்யாவின் உடலை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் தகவலறிந்து நித்யாவின் பெற்றோர் வந்து பார்த்தபோது அவர் வீட்டில் வைத்திருந்த 25 சவரன் நகைகளை காணவில்லை எனவும், அவரை காதலித்து வந்த பாலமுருகன்தான் மகளை நகைக்காக கொலை செய்துவிட்டார் எனவும் நித்யாவின் பெற்றோர் கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதுகுறித்து நித்யாவின் காதலரான பாலமுருகனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டபோது பணம் பிரச்சனை தொடர்பாக நித்யா மற்றும் அவரது பெற்றோருக்கு இடையே சிறிய சிறிய பிரச்சனைகள் வரும் எனவும் பெற்றோர் வருவதாக என்னை நித்யா வெளியே இருக்குமாறு கூறிய நிலையில் நீண்ட நேரமாக நித்யாவிற்கு போன் செய்தும் அவர் எடுக்காததால் தான் வீட்டிற்கு வந்து பார்த்ததாகவும் தெரிவித்தார்.


எனவே நித்யா தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது நகைக்காக கொலை செய்யப்பட்டாரா? என்ற தனிப்படை அமைத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் நித்யாவின் செல்போனை போலீசார் ஆய்வு செய்தபோது கடைசியாக நித்யா ஒருவரிடம் பேசியது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அந்த நபர் யார்? என்று போலீசார் விசாரித்தபோது சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்த சந்தோஷ்குமார் என்பதும், அவர் ஒரு மருத்துவர் என்பதும் தெரியவந்தது. மேலும், அவர் போலீசாரின் கேள்விகளுக்கு மழுப்பலாக பதில் கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து நித்யா இறந்து கிடந்த வீட்டிற்கு அருகே உள்ள பகுதிகளில் இருந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

அப்போது நித்யா வீட்டிற்கு மருத்துவர் சந்தோஷ்குமார் வந்தது உறுதி செய்யப்பட்டது. உடனடியாக அவரை காவல் நிலையம் அழைத்து சென்று போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

போலீஸ் விசாரணையில், நித்யா அழகு கலை நிபுணராக பணியாற்றிக் கொண்டே ஐடி நிறுவனத்தில் பணியாற்றுவதாக கூறி பலரை ஏமாற்றி பணப்பறிப்பில் ஈடுபட்டு வந்துள்ளார். குறிப்பாக, ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு தன் வலையில் சிக்குபவர்களிடம் வீடியோ காலில் பேசி நித்யா பணப்பறிப்பில் ஈடுபடுவதை வாடிக்கையாக வைத்திருந்துள்ளார்.


மேலும் நித்யா தன்னுடன் பழகும் நபர்களை பார்ட்டி, பப் போன்ற இடங்களுக்கு அழைத்துச்சென்று அவர்களுடன் மது அருந்துவதை வழக்கமாக வைத்திருந்துள்ளார். இந்நிலையில் மருத்துவரான சந்தோஷ்குமார் தனது நண்பருடைய திருமணத்தில் நித்யாவை சந்தித்ததும் அவர் மீது காதல் வயப்பட்டுள்ளார்.

உடனே தொலைபேசி எண்ணை வாங்கிக் கொண்டு வாட்சப் வீடியோ கால் மூலமாக பேசி நெருக்கமாகி பின்னர் லிவிங் டுகெதரில் சில நாட்கள் வாழ்ந்துள்ளார். பின்னர் வேறு ஒருவரோடு நித்யாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதை தட்டி கேட்டதால் தகராறு ஏற்பட்டு காவல்நிலையம் வரை சென்று சந்தோஷ்குமார் வேண்டாம் என்றும், புதியதாக பழகிய நபரோடு செல்வதாக கூறி சென்றுள்ளார்.


இது நடந்த சில நாட்களில் புதிதாக பழகிய நபரை விட்டுவிட்டு சந்தோஷ்குமாருடன் மீண்டும் நித்யா பழகியுள்ளார். ஆனால், நித்யா ஏற்கனவே கௌதம் என்பவரை காதலித்து பிரிந்து வந்ததால் அவருடைய நடவடிக்கை பிடிக்காமல் சந்தோஷ்குமார் விலக எண்ணி உள்ளார். இதில் நித்யா ஆத்திரம் அடைந்து சந்தோஷ்குமாரை பிளாக்மெயில் செய்ய தொடங்கி உள்ளார்.

மேலும், தன்னோடு நெருக்கமாக உள்ள புகைப்படங்களை பெற்றோருக்கு அனுப்பி விடுவேன். சமூக வலைத்தளங்களில் வெளியிடுவேன் என்று மிரட்டி மாதம் மாதம் தனது சம்பளத்தில் பெரும் பகுதியை பெற்று செல்வதை வழக்கமாக்கி கொண்டுள்ளார். சமீபத்தில் பேசும்போது, ''உனக்கு திருமணம் ஆனாலும் உன்னை விட மாட்டேன்" என்று மிரட்டியுள்ளார்.

இதனால் நித்யாவின் கதையை முடிக்க சந்தோஷ்குமார் திட்டமிட்டு அவருடன் கடைசியாக ஒன்றாக இருக்கலாம் என ஆசை வார்த்தைகள் கூறி சம்பவத்தன்று நித்யா வீட்டிற்கு வந்துள்ளார். பின்னர், இருவரும் ஒன்றாக இருந்துள்ளனர். இதன் பின்னர் நித்யா மது அருந்தி விட்டு போதையில் மசாஜ் செய்து விடுமாறு கேட்டுள்ளார்.


அப்போது நித்யாவுக்கு மசாஜ் செய்து கொண்டே ''உன்னை உண்மையாக நம்பிய என்னை ஏன் ஏமாற்றினாய்? பிளாக்மெயில் செய்கிறாய்?" என கேட்டபோது, ''உன்னை விடமாட்டேன்" என கூறியதால், தலையணையில் முகம் வைத்து படுத்திருந்த நித்யாவை பின்னந்தலையில் கை வைத்து அழுத்தி சந்தோஷ்குமார் கொலை செய்துள்ளார்.

பின்னர் படுக்கைக்கு அருகில் லாக்கர் இருந்ததால் நித்யாவின் கைகளை வைத்தே லாக்கரை திறந்து நகைகளை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பியுள்ளார். இதன் பின்னர் சந்தோஷ்குமார் தனது வீட்டின் அருகே வசிக்கும் முஜிபர் என்பவரிடம் கட்டை பையில் நகைகளை துணியில் சுற்றி ஒப்படைத்ததாகவும், முஜிபருக்கு கொலை செய்தது தெரியாது என்று விசாரணையில் கூறியதாக போலீஸ் தரப்பில் சொல்லப்படுகிறது.

இதையடுத்து நித்யா கொலை தொடர்பாக மருத்துவர் சந்தோஷ்குமார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் சந்தோஷ்குமாரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் நகையை பெற்று சென்றது தொடர்பாக முஜிபரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Trending News

Latest News

You May Like