ஊரடங்கு நடைமுறை வருமா...? மா. சுப்பிரமணியன் பதில்!

சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ராசிபுரம் புதிய அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை கட்டும் பணியை ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என். ராஜேஸ்குமார், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்கள் சந்திப்பில், தற்போதைய கொரோனா நிலவரம் குறித்து பேசுகையில், "கொரோனா குறித்து மத்திய அரசு வழிகாட்டுதல் நெறிமுறைகள் ஏதும் வெளியிடவில்லை. தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி அனைத்தும் தயார் நிலையில் உள்ளன. தமிழ்நாட்டில் 95 ஆயிரம் படுக்கைகள் கொண்ட மருத்துவ கட்டமைப்புகள் உள்ளன.
அதிமுக அரசு முடிவுற்ற பிறகு 200 மெட்ரிக் டன் அளவிற்கு மட்டுமே ஆக்ஸிஜன் சேமித்து வைத்துக் கொள்ளக்கூடிய நிலை இருந்தது. அதன் பிறகு திமுக அரசு பொறுப்பேற்ற உடன் 2000 மெட்ரிக் டன் அளவிற்கு ஆக்ஸிஜன் வேண்டுமென்ற நிலை வந்தது. முதல்வரின் துரித நடவடிக்கையால் இன்றைக்கு ஏறத்தாழ 3000 மெட்ரிக் டன் அளவிற்கு ஆக்ஸிஜன் சேமித்து வைத்துக் கொள்ளக்கூடிய வசதி உள்ளது.
கொரோனா மாதிரியான பெரிய பாதிப்புகள் எது வந்தாலும் அதனை எதிர்கொள்ள கூடிய மருத்துவ கட்டமைப்புகள் தமிழ்நாட்டில் தயாராகவே உள்ளன. தற்போது வந்துள்ள கொரோனா பாதிப்பு என்பது, 2019 அன்று பரவிய கொரோனா தொற்று படிப்படியாக ஆல்பா, டெல்டா, ஒமிக்ரான் என உருமாற்றம் அடைந்தது.
ஒமிக்ரானில் பல்வேறு வகைகள் உள்ளன. கடந்த மாதம் கொரனோ பாதிப்பு வரத் தொடங்கிய அன்று இவை எந்த வகை கொரோனா என தெரிந்து கொள்ள 19 மாதிரிகள் புனேவில் உள்ள வைராலஜி துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது ஒமிக்ரானில் ஒருவகை என அவர்கள் தெரிவித்துள்ளனர். அதை பொருத்தவரையில் வீரியமற்ற கொரோனா, பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தாது என சொல்லப்பட்டுள்ளது.
அந்த வகையில் தற்போது கொரோனா பாதிப்பு உள்ளானவர்களுக்கு மூன்று நான்கு நாட்கள் சளித்தொல்லை, இருமல், தொண்டை வலி, காய்ச்சல் என்ற பாதிப்பில் இருந்து தற்போது மீண்டும் வருகிறார்கள் என்றாலும் பொதுமக்களுக்கு துறையின் சார்பில் அறிவுறுத்தப்படுவது என்னவென்றால் அதிக நாட்கள் காய்ச்சலோடு பாதிப்புக்கு உள்ளானவர்கள் அக்கம் பக்கத்தில் உள்ள அரசு மருத்துவமனையை அணுகி சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதுதான்...
உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானியாக இருந்த சௌமியா சாமிநாதன் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இனிமேல் இது போன்ற வைரஸ் உங்களோடு தான் இருக்கும், போராடி வாழ வேண்டும் என்ற கருத்தை தெரிவித்தார். அந்த கருத்து தற்போது உண்மையும் ஆகியிருக்கிறது.
எனவே இந்த கொரோனா பாதிப்புகள் வரும் போகும். நிரந்தரமாக நல்ல விஷயங்களை பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும். அதாவது நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள், கர்ப்பிணி தாய்மார்கள், வயது முதிர்ந்தவர்கள், இணை நோய் பாதிப்பு உள்ளவர்கள் பொது இடங்களில் கூடுகிற போது தேவையற்ற இடங்களில் அவர்கள் ஒன்று சேரும்போது முக கவசங்களை அணிவது நல்லது.
அதுமட்டுமல்ல தனி மனித இடைவெளி, அடிக்கடி கைகளை கழுவிக்கொள்ளுவதால் நல்லது. பொதுவாக ஒருவர் இரும்பும் போதோ, தும்பும்போது அவருடைய நீர் திவலைகள் மற்றவர்கள் மேல் பட்டு பாதிப்புகள் உண்டாகாத வண்ணம் கைகளை மறைத்துக் கொண்டு தும்ம வேண்டும், இரும வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதெல்லாம் பொது சுகாதாரத்துறையின் பொது விதிகள். எப்போதுமே இருக்கின்ற விதிகள். கொரோனாவிற்கு என்று பிரத்தியோகமாக விதிக்கப்பட்ட விதிகள் அல்ல. பொது இடங்களில் முகக் கவசம் அணிவது பாதுகாப்பான ஒன்று. ஏற்கனவே கூறியது போல இணை நோய் உள்ளவர்கள், கர்ப்பிணி தாய்மார்கள் இதனை கடைபிடிப்பது நல்லது. வீரியமிக்க கொரோனோ இல்லை எனும் போது ஊரடங்கிற்கு அவசியம் இல்லை" என்றார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர், "மருத்துவ காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. சித்தா, யுனானி, ஹோமியோபதி ஆயுர்வேதம் என 137 பணியிடங்களுக்கான பணி ஆணை வரும் ஜூன் 13ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் வழங்க இருக்கிறார். அதோடு 56 தொழில்நுட்ப பணியாளர்களுக்கும் பணி ஆணைகளும் வழங்கப்பட உள்ளது. 48 பல் மருத்துவர்களுக்கு நேர்காணல் முடிந்துள்ளது. 48 பல் மருத்துவர்களுக்கு 11,720 பேர் தேர்வு எழுதினார்கள். தமிழ்நாட்டில் 84 மையங்களில் 36 மாவட்டங்களில் அந்த தேர்வு நடைபெற்றது.
இதில் 8,700 பேர் தேர்ச்சி பெற்றனர். ரேங்கிங், சான்றிதழ் சரிபார்ப்பு என பல்வேறு படிகள் முடிந்த 48 பேரை தேர்வு செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. மருத்துவ பணியிடங்களை பொறுத்தவரையில் மிக மிக நேர்மையாக வெளிப்படையாக பணிகள் நிரப்பப்பட்டு வருகின்றன. அதுமட்டுமல்ல இந்தியாவிலேயே முதன்முறையாக பணிக்கு வருபவர்களுக்கு அவருடைய விருப்பத்தைக் கேட்டு பணிகள் நிரப்பப்பட்டு வருகின்றன. தற்போது நிரப்பப்பட உள்ள பணிகளும் அவ்வாறே நிரப்பப்படும்" என்றார்.