1. Home
  2. தமிழ்நாடு

ரூ என போட்டால் வயிறு நிரம்பி விடுமா? முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்..!

1

 ஒவ்வொரு ஆண்டும் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முந்தைய நாளில், பொருளாதார ஆய்வறிக்கை வெளியிடப்படும். அதேபோல் தமிழ்நாடு அரசு தரப்பில் முதல்முறையாக பட்ஜெட்டிற்கு முந்தைய நாளில் பொருளாதார ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை இன்று காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவையில் பட்ஜெட்டை நிதித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்யவுள்ளார். பட்ஜெட்டிற்கான இலச்சினையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டார். அதில், ‘சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் பயன்பெறும் வகையில் தமிழகத்தின் பரவலான வளர்ச்சியை உறுதி செய்திட’ என்ற வாசகத்துடன், “2025-26 தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை, எல்லார்க்கும் எல்லாம்” என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.

அதில் மத்திய அரசின் ரூபாய் குறியீடான ₹-க்கு பதிலாக தமிழ் எழுத்தான “ரூ” என்று பயன்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் தமிழ்நாடு அரசின் பட்ஜெட் லோகோ-வாகவும், தமிழை முதன்மைப்படுத்தியும் “ரூ” அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே தேசிய அளவில் தேசிய கல்விக் கொள்கை மற்றும் இந்தி திணிப்பு விவகாரம் மிகப்பெரிய விவாதமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மத்திய அரசின் அடையாள குறியீட்டை தூக்கிவிட்டு, அங்கு தமிழ் எழுத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கியத்துவம் கொடுத்துள்ளார். இந்த செயல் தேசிய அளவில் பேசுபொருளாகி இருக்கிறது.

இந்த நிலையில், திமுக அரசின் இந்த செயல் மக்களை திசை திருப்பும் நடவடிக்கை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக ஜெயக்குமார் கூறியதாவது:-

ரூ என போட்டால் வயிறு நிரம்பி விடுமா? மக்களை ஏமாற்றி திசை திருப்பி இரட்டை வேடம் புரிந்து கபட தாரியாக அதேபோல, பச்சோந்தி தனமாக இந்த அரசினுடைய நடவடிக்கை உள்ளது. நாட்டு மக்கள் எள்ளி நகையாடக்கூடிய ஒரு சந்தர்ப்பவாத அரசு ஆண்டு கொண்டு இருக்கிறது. இதை எல்லாம் திசை திருப்ப வேண்டும். அதற்கு தான் “ரூ”. பட்ஜெட்டில் என்ன எதிர்பார்ப்பார்கள்.. விலைவாசி குறைய வேண்டும். மின்சார கட்டணம் குறைய வேண்டும், பால் விலை குறைய வேண்டும், சொத்து வரி குறைய வேண்டும் என்று தான். அதற்கு பிறகு எல்லா வரி உயர்வும் குறைய வேண்டும் என்றுதான் மக்கள் எதிபார்ப்பார்கள். அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாமல் சும்மா ரூ என போட்டால் வயிறு நிரம்பி விடுமா? இதெல்லாம் ஏமாற்று வேலை. தமிழை வைத்து வியாபாரம் செய்கிறீர்கள். இதனால் என்ன பிரயோஜனம் என கேட்கிறேன். விலைவாசி குறைய வேண்டும். அதுதான் மக்களுக்கு உபயோகமாக இருக்கும்.

இஷ்டத்துக்கு விலையை ஏற்றியிருக்கிறார்கள் மின்சாரம், சொத்துவரி, பால் விலையை குறையுங்கள். அது உங்களுக்கு உபயோகமாக இருக்கும். டாஸ்மாக் வருவாயை ஏற்றுவது.. 54 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேலே ஏற்றி அதில் வருமானத்தை கூட்டுவது.. ஒட்டுமொத்த பொருளாதார வல்லுனர் குழு கூட்டமாம் இன்று. இஷ்டத்துக்கு விலையை ஏற்றியிருக்கிறார்கள். இதுதான் பொருளாதார வல்லுனர் குழு போட்ட லட்சணம். தேனும் பாலும் ஆறும் ஓடுகிறதா தமிழ்நாட்டில்.. அப்படிப்பட்ட நிலையில் இன்று ரூ அவசியமா? மக்களை திசை திருப்பி ஏமாற்றி பொய் சொல்லி அதன் மூலம் தமிழை வைத்து பிழைப்பு நடத்தி வியாபாரம் நடத்துகிற கூட்டம்தான் இன்று திமுக கூட்டம் என்பது. இவ்வாறு அவர் கூறினார்.

Trending News

Latest News

You May Like