1. Home
  2. தமிழ்நாடு

இப்படி கூட பெற்றோர் இருப்பாங்களா? ஐபோனுக்காக குழந்தையை விற்ற தம்பதி..!

1

 இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களில் இடம்பெற்றிருக்கும் ரீல்ஸ் போன்ற அம்சங்கள், டெக்னாலஜி தெரியாத குழந்தைகளைக் கூட அடிமையாக்கி வைத்திருக்கிறது. இந்த அடிமைத் தனத்தினால் பெற்றோர், தங்களது குழந்தையை விற்ற சம்பவம் நமது நாட்டில் நடந்திருக்கிறது.

மேற்கு வங்க மாநிலம், 24 பர்கானா மாவட்டம், பானிஹாட்டி காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெய்தேவ். இவரது மனைவி சதி. இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகள், 8 மாதமுடைய மகன் இருந்தனர். இவர்கள் வாழ்க்கையை நடத்த முடியாமல் பொருளாதார சிக்கலில் சிக்கித் தவித்து வந்தனர். இந்த நிலையில் , நேற்று முன்தினம் அவர்களது 8 மாத ஆண் குழந்தை காணாமல் போனது.

இதன் பின் தம்பதியரின் நடவடிக்கையில் மாற்றம் இருப்பதை அக்கம் பக்கத்தினர் கண்டனர். அத்துடன் விலை உயர்ந்த ஐபோன் அவர்கள் வைத்திருந்ததால் அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதுகுறித்து அக்கம் பக்கத்தினர், குழந்தை எங்கே என்று ஜெய்தேவிடம் கேட்டுள்ளனர். அப்போது பணத்திற்காக 8 மாத ஆண் குழந்தையை விற்று விட்டதாக அவர் கூறினார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர், இதுகுறித்து கர்தா காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் ஜெய்தேவ், சதி தம்பதியரிடம் விசாரணை நடத்தினர். அப்போது ரஹ்ராவில் வசிக்கும் பிரியங்கா கோஷ் என்பவருக்கு குழந்தையை விற்றது தெரிய வந்தது. இதையடுத்து குழந்தையை போலீஸார் மீட்டதுடன் பிரியங்கா கோஷை இன்று கைது செய்தனர்.

இதுதொடர்பாக உள்ளூர் கவுன்சிலர் குஹா கூறுகையில்," 8 மாதக்குழந்தையை விற்ற பிறகு அவர்களது 7 வயது மகளையும் விற்க முயன்றனர். எங்களுக்குத் தகவல் தெரிந்தவுடன், போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தோம். இதையடுத்து ஜெய்தேவை, சதியை போலீஸார் கைது செய்தனர்" என்றனர்.

"குழந்தையை விற்ற பணத்தில் விலை உயர்ந்த ஐபோன் வாங்கி, மேற்கு வங்கத்தின் பல பகுதிகளுக்குச் சென்று ஜெய்தேவும், அவரது மனைவி சதியும் ரீல்ஸ் படம் பிடித்தது தெரிய வந்தது. ஏழ்மை காரணமாக குழந்தையை விற்றார்களா அல்லது ஐபோனுக்காக குழந்தையை விற்றார்களா என்று விசாரணை நடத்தி வருகிறோம்" என்று போலீஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் மேற்குவங்க மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending News

Latest News

You May Like