சென்னையை போன்று மதுரை மக்களுக்கும் ரூ.1000 நிதியுதவி கிடைக்குமா ? - அரசு கூறுவது என்ன ?

தமிழகத்தில் கொரோனா அதிகரித்து வரும் நிலையில் சென்னையில் அதன் தாக்கம் உச்சத்தில் உள்ளது. இதனால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பொது முடக்கம் அமலில் உள்ளது.
அதன் தொடர்ச்சியாக, மேற்கண்ட பகுதிகளில் வசிக்கும் ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 நிவாரணமாக வழங்கப்படும் எனவும், மேற்கண்ட பகுதிகளில் வசிக்கும் அனைத்து அமைப்புசாரா தொழிலாளர் நலவாரிய உறுப்பினர்களுக்கும் மற்றும் பல்வேறு துறைகளிலுள்ள பிற நலவாரிய உறுப்பினர்களுக்கும் ரூ.1000 நிவாரணமாக வழங்கப்படும் எனவும் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். அதன்படி நிவாரண தொகை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, கடந்த சில நாட்களாக சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களிலும் கொரோனா அதிகரித்து வருகிறது.
குறிப்பாக மதுரை மாவட்டத்தில் கொரோனா தொற்று ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வந்ததால், மதுரை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகள், பறவை டவுன் பஞ்சாயத்து, மதுரை கிழக்கு, மேற்கு, திருப்பரங்குன்றம் ஊரகப் பகுதிகளில் வருகிற 30ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஊரடங்கு அமலில் உள்ள சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு ரூ.1000 நிவாரணமாக வழங்கப்படும் என அறிவித்தது போல், மதுரையில் ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ரூ.1,000 நிவாரண தொகை வழங்கப்படுமா என்ற கேள்வியும், கோரிக்கையும் எழுந்துள்ளது.
இதற்கு விளக்கம் அளித்துள்ள உணவுத்துறை அமைச்சர் காமராஜ், முழுஊரடங்கு காரணமாக மதுரையில் ரூ.1000 உதவித் தொகை வழங்குவது பற்றி முதல்வர் பழனிசாமி முடிவெடுப்பார் என தெரிவித்துள்ளார்.
newstm.in