அழிந்து வரும் இனத்தை காக்குமா அரசு?

தேவாங்குகள் பற்றி நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் பார்த்திருப்பதற்கு வாய்ப்புகள் குறைவு. காரணம் இவை வனப் பகுதிகளில் மட்டுமே வாழக் கூடிய அபூர்வ உயிரினம். குரங்குகளைப் போல பகலில் ஓடியாடி இரை தேடி விட்டு, இரவில் ஓய்வெடுக்கும் பழக்கம் தேவாங்குகளுக்கு இல்லை. இவை இரவில் மட்டுமே சுறுசுறுப்பாக இயக்கக் கூடிய இரவாடிகள். பகல் நேரங்களில் அடர்ந்த புதர்களில் மறைந்து கொண்டு தேவாங்குகள் ஓய்வெடுக்கும். அதனால் தான் நிறைய பேருக்கு இதனை பார்ப்பதற்கு வாய்ப்புகள் இல்லை.
காடுகளின் காவலன் தேவாங்குகள்
பல்லுயிர்ச் சூழலுக்கு முக்கிய பங்காற்றும் விலங்குகளில் மிக முதன்மையானது தேவாங்குகள். மிக சாதுவான இந்த விலங்குகளை காடுகளின் நண்பன் என்றே சொல்லலாம். தீமை செய்யும் பூச்சிகளை எல்லாம் உண்டு, வனத்தின் பல்லுயிர்ச் சூழலை காப்பாற்றி காடுகளின் காவலனாகவும் திகழ்கின்றன.
ஊரை விட்டு ஒதுக்குப்புறமாக உள்ள மலைக் காடுகளையும், முட்புதர்காடுகளையும் இருப்பிடமாகக் கொண்ட தேவாங்குகள் மதுரை, திண்டுக்கல், கரூர் மாவட்டங்களில் வாழ்ந்து வருவதாக தமிழ்நாடு அரசின் தரவுகள் தெரிவிக்கின்றன. இதனால் தான் கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்ட எல்லையில் உள்ள கடவூர் வனப்பகுதி, அய்யலூர் வனப்பகுதி ஆகியவற்றைக் கொண்ட பகுதியை நாட்டிலேயே முதன்முதலாக தேவாங்குகள் சரணாலயமாக தமிழ்நாடு அரசு அறிவித்தது. அழியும் நிலையில் உள்ள தேவாங்குகளை பாதுகாப்பதற்கு இது முக்கியமான முயற்சியாகும்.
அழிந்து வரும் தேவாங்குகள்
மதுரையில் இருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மேலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கேசம்பட்டி, கம்பூர் உள்ளிட்ட அழகர் மலை அடிவாரத்தில் தேவாங்குகள் வாழ்ந்து வருகின்றன. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக தேவாங்குகள் உயிரிழப்பது அதிகரித்திருப்பதாக அப் பகுதி மக்கள் கூறுகின்றனர்.
தேவாங்குகளைப் பாதுகாப்பது குறித்த கவலையில் உள்ள கிராம மக்களை ஈடிவி பாரத் தமிழ்நாடுவின் சார்பாக சந்தித்தோம். அப்போது பேசிய கேசம்பட்டியைச் சேர்ந்த விவசாயி ஜீவா, "எங்கள் கிராமத்தை சுற்றி மா விவசாயம் அதிக அளவில் நடைபெறுகிறது. அது மட்டுமன்றி இப்பகுதியில் இரண்டு கோயில் காடுகள் உள்ளன. இந்த சூழல் என்பது தேவாங்குகள் வாழ்வதற்கு ஏற்றதாக உள்ளது. இரவு நேரத்தில் தேவாங்குகள் இரை தேடிச் செல்லும் போது, சாலையைக் கடக்க நேரிடுகிறது. வாகனங்கள் வரும் போது அவை சுதாரித்து ஓடுவதற்குள் வாகனங்களில் அடிபட்டு உயிரிழந்து விடுகின்றன. இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன" என்றார்.
அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் விலங்கு
மதுரை அமெரிக்கன் கல்லூரியில் விலங்கியல் பயின்ற தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் ஜெஸ்வின் ஸ்மைல் தேவாங்குகள் குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டிருக்கிறார். நம்மிடம் பேசிய அவர், "தேவாங்கு (Lorisidae) குடும்பத்தில் சாம்பல் நிற தேவாங்கு (Loris lydekkerianus) மற்றும் வங்காள தேவாங்கு (Nycticebus bengalensis) என இரு சிற்றினங்கள் இந்தியாவில் காணப்படுகின்றன.
மதுரை அழகர் கோயிலைச் சுற்றி உள்ள பகுதிகளில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் நடப்பு ஆண்டு மார்ச் வரை என 4 மாதங்கள் ஆய்வு செய்தேன். அப்போது இந்த பகுதியில் 194 சாம்பல் நிற தேவாங்குகள் காணப்பட்டன. கேசம்பட்டி கிராமத்தில் அதிகபட்சமாக 111 தேவாங்குகள் காணப்பட்டன. மற்ற இரு ஊராட்சிகளான கம்பூர் மற்றும் சேக்கிபட்டியில் முறையே 55 மற்றும் 28 தேவாங்குகள் காணப்பட்டன.
அழிவதற்கான காரணம் என்ன?
தற்போது மா விவசாயத்தை பாதுகாப்பதற்காக தெளிக்கப்படும் பூச்சிக்கொல்லிகளால் எறும்பு, கரையான், பூச்சிகள் செத்து விடுகின்றன. இதனால் தேவாங்குகளுக்கு உணவு பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனால் இரவு நேரங்களில் அவைகள் சாலையை கடந்து செல்ல நேரிடுகிறது. இதன் காரணமாக அவை ஆபத்தை எதிர்கொள்கின்றன.
நாங்கள் ஆய்வு மேற்கொண்ட 4 மாதங்களில் சாலையில் அடிபட்டு கிடந்த தேவாங்குகளை பார்த்தோம். அவை வாழ்ந்து கொண்டிருந்த இடத்தில் நமது தேவைக்காக வீடுகளும் சாலைகளும் கட்டி வாழ்ந்து வருகிறோம். இதனால், அவை இரை தேடி வெளியிடங்களுக்குச் செல்லும் போது உயிரிழப்பை சந்திக்கின்றன. தமிழக அரசின் வனத்துறையும் அழகர் மலை அடிவாரத்தில் உள்ள கிராமப் பகுதிகளில் வசிக்கும் தேவங்குகளை பாதுகாப்பதற்கு உடனடியாக கவனம் செலுத்த வேண்டும்" என்றார்.
அரசின் ஒப்புதல் பெற்று நடவடிக்கை
நம்மிடம் பேசிய கேசம்பட்டியை சேர்ந்த பொன்னழகு, "நான் சிறுவயதிலிருந்தே தேவாங்குகளை இங்கு பார்த்து வருகிறேன். ஊருக்குள் இருக்கும் மரங்களிலேயே தேவாங்குகளை பார்க்க முடியும். ஆனால் அண்மை காலங்களாக அவற்றின் எண்ணிக்கை குறைந்து வருகிறது" என்றார்.
இது தொடர்பாக மதுரை மாவட்ட வனத்துறை அலுவலகத்தை தொடர்பு கொண்டோம். அப்போது நம்மிடம் பேசிய அதிகாரி ஒருவர்,"மதுரை அழகர் மலை அடிவாரத்தில் தேவாங்குகளுக்கான சரணாலயம் அமைக்கும் அளவிற்கு அவற்றின் எண்ணிக்கை உள்ளதா? என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும். மதுரை - திண்டுக்கல் மாவட்ட எல்லையில் உள்ள வனப்பகுதி என்பதால், உரிய அதிகாரிகளோடு கலந்து பேசி தான் இதற்கு முயற்சிகளை மேற்கொள்ள முடியும். ஊர் மக்களின் வேண்டுகோளுக்கிணங்க வனத்துறை இப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு தேவாங்குகளை பாதுகாப்பதற்கு உரிய செயல் திட்டத்தை வகுத்து அரசுக்கு அனுப்பி வைக்கும். அரசின் ஒப்புதல் பெற்றதும் அதனை நடைமுறைப்படுத்துவோம்" என்றார்.
தேவாங்குகள் உணவு தேடி செல்லும் போது தான் அவைகள் விபத்து போன்ற ஆபத்துகளை சந்திக்க நேரிடுகின்றன. எனவே, அதன் வசிப்பிடங்களிலேயே உணவுத் தேவையைப் பூர்த்தி செய்து கொள்ளும் வகையில் வனத் துறை ஒரு செயல் திட்டத்தை மேற்கொள்ள வேண்டியது உடனடி தேவையாகும்.