குழந்தைக்கு இப்படி கூட மரணம் வருமா ? குழந்தையை கொன்ற நாகம்...!

வேலூர் ஆசனாம்பட்டு பகுதியை சேர்ந்தவர் கன்னியப்பன் (23). இவரது மனைவி செல்வி (21). இவர்களுக்கு திருமணமாகி ஓராண்டு ஆன நிலையில் செல்வி நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். பிரசவத்திற்காக அவர் ஒடுகத்தூர் அருகே உள்ள ஓ.ராஜாபாளையம் கிராமத்தில் உள்ள தனது அம்மா வீட்டிற்கு கடந்த 3 மாதத்திற்கு முன்பு சென்றார்.
இதையடுத்து செல்விக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. 3 மாத குழந்தை பிரனீஷ் உடன், செல்வி தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு முழுவதும் குழந்தை அருகில் தூங்கிய தாய் செல்வி, விடிந்ததும் வழக்கம்போல் வீட்டிற்கு வெளியே வேலை செய்து கொண்டு இருந்தார்.
குழந்தை வீட்டில் உள்ள ஒரு அறையில் தூங்கிக்கொண்டு இருந்தது. திடீரென குழந்தையின் அலறல் சத்தம் கேட்டது. பதறிப்போன செல்வி வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது குழந்தையை நாகப்பாம்பு ஒன்று கடித்துவிட்டு படம் எடுத்து நின்றது.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த தாய் செல்வி அக்கம் பக்கத்தினர் உதவியோடு பாம்பை விரட்டினார். அதையடுத்து பாம்பு கடித்த குழந்தையை மீட்டு, ஒடுகத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தூக்கி சென்றனர். அங்கு குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துமவனைக்கு அழைத்து சென்றனர்.
அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். குழந்தை இறந்த தகவலை கேட்டு தாய் செல்வி கதறி அழுதார். இதுகுறித்து வேப்பங்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நாகப்பாம்பு கடித்து 3 மாத பச்சிளம் குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.