அதிமுக - தேமுதிக கூட்டணி தொடருமா..? பிரேமலதா ரியாக்ஷன்..!

கடந்த லோக் சபா தேர்தலின் போது, அ.தி.மு.க., கூட்டணியில் இடம்பெற்றிருந்த தே.மு.தி.க.,வுக்கு ஒரு ராஜ்ய சபா சீட் வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில், இந்த மாதம் நடக்கும் ராஜ்ய சபா தேர்தலுக்கான வேட்பாளர்களை அ.தி.மு.க., அறிவித்து விட்டது. மேலும், தே.மு.தி.க.,வுக்கு அடுத்த ஆண்டு ராஜ்ய சபா சீட் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், அ.தி.மு.க.,வின் இந்த அறிவிப்பு குறித்து தே.மு.தி.க., பொதுச்செயலாளார் பிரேமலதா இன்று செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது: தற்போதைய மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு சீட் வழங்கப்படும் என அதிமுக தரப்பில் ஏற்கெனவே உறுதி அளிக்கப்பட்டது. ஆனால் இப்போது அடுத்த தேர்தலில் சீட் எனக் கூறுகின்றனர்.
ஏற்கனவே அதிமுக உறுதியளித்தபடி அன்புமணி, ஜிகே வாசனுக்கு சீட் வழங்கியிருந்தனர். அதன்படி இது தேமுதிகவுக்கான வாய்ப்பாகவே இருந்தது. இன்று அவர்கள் தங்கள் கடைமையை ஆற்றியுள்ளனர். இந்தாண்டுக்குப் பதிலாக அடுத்தாண்டு ராஜ்யசபா சீட்டை வழங்குவதாகக் கூறியுள்ளனர். நான் ஒரு விஷயத்தைத் தெளிவாகச் சொல்லிக் கொள்கிறேன். அரசியல் என்பதே தேர்தலை ஒட்டி தான் இருக்கும். 2026 தேர்தலை ஒட்டியே ராஜ்யசபா சீட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அவங்க (அதிமுக) தேர்தலுக்காகப் பண்ண வேண்டியதை பண்ணிட்டாங்க.. நாங்களும் தேர்தலுக்காகப் பண்ண வேண்டியதைப் பண்ணுவோம்.. வரும் ஜனவரி எங்கள் முடிவு அறிவிப்போம்.
விஜயகாந்த் மறைவின்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இருந்து அரசு மரியாதை செலுத்தி துயரத்தில் பங்கேற்றதை மறக்க மாட்டோம். இன்று திமுக பொதுக்குழுவில் விஜயகாந்த்திற்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றியதற்கு தேமுதிக சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
அவர் மேலும் கூறுகையில், "விஜயகாந்த் மறைந்து 1.5 ஆண்டுகள் ஆகிவிட்டது. விஜயகாந்த் மறைந்தபோது முதல்வர் ஸ்டாலின் உட்பட அனைத்து அமைச்சர்களும் இங்கேயே இருந்து இறுதி மரியாதை கொடுத்தனர். அரசு மரியாதையும் அளிக்கப்பட்டது. எங்கள் துயரத்தில் பங்கேற்றனர். அதை நாங்கள் எப்போதும் மறக்க மாட்டோம். அந்த வகையில் இன்று இரங்கல் தீர்மானம் நிறைவேற்றியதற்கு நன்றி" என்றார்.
தேமுதிகவிற்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்பட்ட நிலையில், அதிமுகவுடனான கூட்டணியை இந்தச் செய்தியாளர் சந்திப்பில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா உறுதி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.