இப்படி ஒரு கொடுமை எங்கேயாவது நடக்குமா ? சவக்குழி மேல் சாலை.. தூக்கி வீசப்படும் எலும்புக்கூடுகள்..!

தர்மபுரி அருகே ராமகொண்ட அள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட புதுச்சாம்பள்ளி பகுதியில், 200-க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர் சமூகத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், இந்த ஊருக்காக ஒதுக்கப்பட்டுள்ள சுடுகாட்டிற்கு, சாலை அமைப்பதாக கூறி, அதற்கான பணிகளை செய்துள்ளனர்.
ஆனால் சுடுகாட்டை தாண்டி உள்ள நிலங்களை, வீட்டுமனையாக மாற்றி விற்பனை செய்யும் நோக்குடன், ரியல் எஸ்டேட் அதிபர்களுக்கு ஆதரவாக, சுடுகாட்டை மூடி மறைத்து, சவக்குழிகளின் மேல், சாலை அமைத்துள்ளதாக கூறி, இந்த ஊர் பொது மக்கள் இன்று திடீர் போராட்டத்தில் இறங்கினர்.
50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், தங்களது பெற்றோர்களின் சவக்குழிகள், காணாமல் போனதாக கூறி கதறி அழுதனர். மேலும் உடல்களை தோண்டி எடுத்து எலும்புகளை வீசியுள்ளதாக கூறப்படுகிறது.
புதிதாக போடப்பட்ட சாலையில் ஆங்காங்கே எலும்புக்கூடுகள் சிதறி கிடந்தது. இதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.