வரும் நாட்களில் கேரளாவில் மழை தொடருமா..? வெதர்மேன் கொடுத்த அப்டேட்..!
கேரளாவில் பல்வேறு இடங்களிலும் கடந்த 2 வாரங்களாக நல்ல மழை பெய்து வருகிறது.இந்தச் சூழலில் தான் கோழிக்கோடு, வயநாடு, மல்லாபுரம், திருச்சூர், எர்ணாகுளம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று காலை முதல் கனமழை பெய்தது. ஏற்கனவே தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில், இந்த திடீர் கனமழையும் அங்கே நிலச்சரிவை ஏற்படுத்தியது. இந்த நிலச்சரிவில் சிக்கிய இதுவரை 43க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
மீட்பு பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. அதேநேரம் பாதிக்கப்பட்ட கிராமங்களை இணைக்கும் ஒரே பாலம் நிலச்சரிவால் அடித்துச் செல்லப்பட்டுள்ள நிலையில், அங்கு விரைந்து செல்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கேரளாவில் வரும் நாட்களில் மழை தொடருமா என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார். இது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது ட்விட்டர் பக்கத்தில், "கர்நாடகாவின் குடகு, ஹாசன், சிக்மகளூர், கேரளா, நீலகிரி, வால்பாறை, காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கனமழை தொடர்ந்து இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆகஸ்ட் 1 முதல் மேற்குக் கடற்கரைப் பகுதிகளில் மழை குறையும்.
இவ்வளவு பெரிய அளவில் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கவில்லை. கனமழை பெய்யும் என எதிர்பார்ப்பு இருந்தது உண்மை தான். ஆனால் எப்படியோ கேரளா, வால்பாறை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் மழை மேகங்கள் தொடர்ந்து இருக்கின்றன. கேரளாவில் பருவமழை தொடங்கியது முதல் பெய்த அதிதீவிர கனமழை என்றால் அது இதுதான். வால்பாறை அணைகள் மற்றும் நீலகிரி அணைகளில் அதிக நீர்வரத்து உள்ளது. கன்னியாகுமரி, தேனி மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
பொதுவாக மழை வரும் போது கொஞ்ச நேரத்திற்குப் பிறகு மழை மேகங்கள் வலுவிழக்கும். அதன் பிறகு மற்றொரு மழை மேகங்கள் உருவாகும்.. ஆனால், இப்போது அப்படி இல்லை மழை மேகங்கள் வலுவிழக்கவில்லை. கனமழை தொடர்ந்து பெய்தே வந்துள்ளது.. இது அரிய நிகழ்வு என்று குறிப்பிட்ட வெதர்மேன், நிலச்சரிவுக்கு இதுவும் ஒரு முக்கிய காரணம் எனக் குறிப்பிட்டுள்ளார்.