விரைவில் ஆம்னி பஸ் கட்டணம் உயர்கிறதா ? வந்த அதிகாரப்பூர்வ விளக்கம்
சுங்கச்சாவடிகளில் ஒவ்வொரு ஆண்டும் கட்டணம் தொடர்ந்து உயர்த்தப்பட்டே வருகிறது. நாட்டில் உள்ள சில சுங்கச்சாவடிகளில் குறிப்பிட்டவற்றில் ஏப்ரல் 1ம் தேதி தேதி சுங்க கட்டணம் உயர்த்தப்படும். மற்ற சுங்கச்சாவடிகளில் செப். 1ம் தேதி கட்டணம் உயர்த்தப்படும். இந்தாண்டு லோக்சபா தேர்தல் இருந்ததால் ஏப்ரல் மாதத்திற்குப் பதிலாக ஜூன் மாதம் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது.
அதைத் தொடர்ந்து செப். 1ம் தேதி மீதமுள்ள சுங்கச்சாவடிகளிலும் கட்டணம் உயர்த்தப்பட்டன. நேற்றைய தினம் விக்கிரவாண்டி, உளுந்தூர்பேட்டை, மதுரை, ஓமலூர், சமயபுரம் உட்பட 25 சுங்கச்சாவடிகளில் கட்டணங்கள் உயர்த்தப்பட்டது. 5 முதல் 7 சதவீதம் வரை அதாவது ரூ.5 முதல் ரூ.45 வரை கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டதால் அத்தியாவசிய பொருள்களின் விலையும் உயரலாம் எனக் கூறப்பட்டது. இதற்கிடையே சுங்கச்சாவடிகளின் கட்டண உயர்வால் மாநிலத்தில் ஆம்னி பஸ் கட்டணங்கள் உயர்வதாகத் தகவல் வெளியானது. எந்தளவுக்குச் சுங்கக் கட்டணம் உயர்ந்து இருக்கிறதோ.. அதற்கேற்ப ஆம்னி பஸ் கட்டணத்தை உயர்த்த ஆம்னி பஸ் உரிமையாளர் சங்கத்தினர் முடிவு செய்துள்ளதாகத் தகவல் பரவியது.
இது குறித்து அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அ.அன்பழகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் ஆம்னி பேருந்து கட்டணம் வழக்கத்தை விட உயராது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாட்டில் 25 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டாலும், பொருளாதார நெருக்கடியை ஆம்னி பேருந்து உரிமையாளர்களே ஏற்றுக்கொள்ளும் வகையில் ஆம்னி பேருந்து கட்டணம் வழக்கத்தைவிட உயராது என்று அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அ.அன்பழகன் தனது அறிக்கையில் கூறியுள்ளார். மேலும், டோல்கேட் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், அதை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.