1. Home
  2. தமிழ்நாடு

உயிரே போனாலும் பா.ஜ.க-வுக்கு அடிபணிய மாட்டோம்: தமிழக முதல்வர் ஸ்டாலின்..!

1

மும்மொழிக் கொள்கை, இந்தி திணிப்பு, மத்திய அரசு சமக்ர சிக்க்ஷா திட்டத்துக்கான நிதியை விடுவிக்காதது என தமிழ்நாடு அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது. மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள் நாகரிகமற்றவர்கள் என்று பேசியது, பின்னர், தமிழக எம்.பி.க்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து தர்மேந்திர பிரதான் தான் பேசியதைத் திரும்பப் பெற்றார். மன்னிப்பும் கேட்டார்.

இதைத் தொடர்ந்து, திருவள்ளூரில் மத்திய அரசைக் கண்டித்து தி.மு.க சார்பில் கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. மத்திய அரசைக் கண்டித்து நடைபெற்ற கண்டனப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “இந்தியாவை அணி திரட்டுவோம், உயிரே போனாலும் பா.ஜ.க-வுக்கு அடிபணிய மாட்டோம்” என்று உறுதி கூறினார்.

இந்த கண்டனப் பொதுக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “ஒரு மாநில அரசு நாட்டிற்கே எடுத்துக்காட்டாக இருந்தால், அந்த மாநில அரசுக்கு துணை நிற்க வேண்டியது ஒன்றிய அரசின் கடமை. ஆனால், பா.ஜ.க அரசு தமிழ்நாடு தலைநிமிர்ந்து நடைபோடுகிறதே என்ற பொறாமையோடு செயல்படுகிறது. தமிழ்நாட்டிற்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் திமுக காவலாக இருக்கிறதே என்ற எரிச்சலோடு உள்ளது. ஒன்றிய அரசு நம்மை சிறுமைப்படுத்தப் பார்க்கிறது. பதவி சுகத்திற்காக ஒன்றிய அரசிடம் பணிந்து போகும் முதுகெலும்பில்லாத அடிமைக் கூட்டமல்ல நாம்.” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய மு.க. ஸ்டாலின், “தமிழ்நாடு என்ன பிச்சைக்கார மாநிலமா? நாங்கள் உழைத்து, வரியாக செலுத்திய பணத்தில் இருந்து எங்களுக்கான நிதியைத் தருவதில் என்ன பிரச்னை? மாணவர்களின் நலனுக்கான நிதியைக் கொடுக்காமல் இருப்பது நியாயமா?” என்று ஆவேசமாகக் கேள்வி எழுப்பினார்.

 “தேசிய கல்விக் கொள்கை அல்ல, இது காவிக் கொள்கை. இது இந்தியாவை வளர்ப்பதற்காக அல்ல, இந்தியை வளர்ப்பதற்காக கொண்டுவரப்பட்ட காவிக் கொள்கை. இந்தியை வளர்க்க கொண்டுவந்த காவிக் கொள்கையே தேசிய கல்விக் கொள்கை. மாணவர்களை பள்ளிகளில் இருந்து வெளியேற்றும் தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மாட்டோம். ரூ.10,000 கோடி கொடுத்தாலும் ஏற்கமாட்டோம் என்று கூறியடதால மத்திய அமைச்சருக்கு எரிச்சல்” என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சாடினார்.



 

Trending News

Latest News

You May Like