1. Home
  2. தமிழ்நாடு

இந்து-முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்ய மாட்டேன் : பிரதமர் மோடி..!

1

நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது.தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஜூன் 1-ம் தேதி நடைபெற உள்ள இறுதிகட்ட தேர்தலில் வாரணாசியில் பா.ஜ.க. வேட்பாளராக பிரதமர் மோடி களமிறங்கியுள்ளார். இதற்கான வேட்புமனுவை பிரதமர் மோடி செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தார்.

இதனிடையே, கடந்த சில நாட்களுக்கு முன் ராஜஸ்தானில் நடந்த பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசிய கருத்துகள் சர்ச்சையாகின. அப்போது பிரதமர் மோடி பேசுகையில், உங்கள் சொத்துக்கள் அதிக குழந்தைகளை பெற்றவர்களுக்கு பகிர்ந்து அளிக்கப்பட வேண்டுமா?  ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா? என்றார்.

இந்நிலையில், வாரணாசியில் பிரதமர் மோடி தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்தார். அவரிடம் கடந்த சில நாட்களுக்குமுன் ராஜஸ்தான் பொதுக்கூட்டத்தில் தெரிவித்த கருத்துகள் குறித்து அப்போது கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்து பிரதமர் மோடி கூறியதாவது, அதிக குழந்தைகள் பெற்றவர்கள் என நான் இஸ்லாமிய மதத்தினரை மட்டும் பேசவில்லை, ஒட்டுமொத்தமாக ஒவ்வொரு ஏழை குடும்பத்தையும் பற்றியே பேசினேன். இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன். முஸ்லிம் மக்கள் மீதான அன்பை நான் விளம்பரப்படுத்த விரும்பவில்லை. நான் வாக்கு அரசியலுக்காக வேலை செய்பவன் அல்ல. அனைவருக்குமான ஆட்சி என்பதில் நான் நம்பிக்கை கொண்டவன்.

அதிக குழந்தைகள் பெற்றவர்கள் என்று யாரேனும் குறிப்பிட்டால் அவர்கள் இஸ்லாமியர்கள் என்று எப்படி கருதுகிறீர்கள். இஸ்லாமியர்கள் மீது ஏன் நியாயமற்ற முறையை கையாளுகிறீர்கள். எனக்கு மிகவும் அதிர்ச்சியாக உள்ளது.

ஏழை குடும்பங்களின் நிலை இப்படித்தான் உள்ளது. எந்த சமூகமாக இருந்தாலும் ஏழ்மை இருக்கும் இடத்தில் அதிக குழந்தைகள் உள்ளனர். நான் இந்து என்றோ முஸ்லிம் என்றோ குறிப்பிடவில்லை. ஒரு குடும்பம் எத்தனை குழந்தைகளை கொண்டிருந்தாலும் குழந்தைகளை அந்த குடும்பமே கவனித்துக்கொள்ளவேண்டும். உங்கள் குழந்தைகளை அரசு கவனித்துக்கொள்ளும் சூழ்நிலைக்கு தள்ளிவிடவேண்டாம். இந்து - முஸ்லிம் பிரிவினையை நான் ஒருபோதும் செய்யமாட்டேன் இது என் உறுதிமொழி

இவ்வாறு அவர் கூறினார்.

Trending News

Latest News

You May Like