அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்குமா ? ஐகோர்ட்டில் இன்று விசாரணை..!

சட்டவிரோதப் பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின்கீழ், அமலாக்கத் துறையினரால் கடந்த ஜூன் 14-ம் தேதி கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இருமுறை மனு தாக்கல் செய்தார். இந்த மனுக்கள் ஜூன் 16-ம் தேதி மற்றும் செப்டம்பர் 20-ம் தேதிகளில் முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லியால் தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கில் ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், உடல் நலக்குறைவால் தாம் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஏற்கெனவே அறுவை சிகிச்சை செய்ததில் இருந்து முழுமையாக குணமடையாத நிலையில் நேற்று முன்தினமும் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
நேற்றுமுன்தின சிகிச்சைக்கு பின்னர் மீண்டும் சிறைக்கு சென்ற நிலையில் சிறையில் இருந்தவாறே சிகிச்சை பெறுவதில் சிரமம் உள்ளதால் ஜாமீன் வழங்க வேண்டுமென அந்த மனுவில் அவர் கோரியுள்ளார். மனுவை அவசர வழக்காக விசாரிக்க கோரி நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ முறையிட்டார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவித்தார்.