வாயில்லா ஜீவனுக்கு நீதி கிடைக்குமா? மாலுக்குள் நுழைந்த நாய்.. 2வது மாடியில் இருந்து வீசிய ஊழியர்கள்..!

கோவை மாவட்டத்தில் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்த நாய்கள் மனிதர்களை கடிப்பது, விபத்துகளை ஏற்படுத்துவது என்று பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. எனவே அவற்றை கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளும் வலுத்து வருகின்றன. மாநகராட்சி நிர்வாகம் தெரு நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில், கோவை சத்தி சாலை, சரவணம்பட்டி பகுதியில் உள்ள புரோசோன் ஷாப்பிங் மால் இயங்கி வருகிறது. எப்போதும் பரபரப்புடன் இயங்கி வரும் இந்த வளாகத்தில் கடந்த பிப்ரவரி 8 ஆம் தேதி இரண்டாவது மாடிக்கு ஒரு நாய் சென்றதாக கூறப்படுகிறது. இதை கண்ட அந்த வளாகத்தின் ஊழியர்கள் இதனை தூக்கி அங்கிருந்து வீசியதாகவும் கூறப்படுகிறது. அதன் சிசிடிவி கட்சியின் தற்போது வெளியாகி உள்ள நிலையில் கௌதம் என்பவர் அதனை மீட்டு தனியார் கால்நடை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை கொடுத்து வருகிறார். நாய்க்கு காலில் மட்டும் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக விலங்குகள் நல ஆர்வலர் கௌதம் சீனிவாசன் என்பவர் சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுகுறித்து கெளதம் கூறுகையில், " வாயில்லா ஜீவனை இரண்டாவது மாடியில் இருந்து தூக்கி வீசுயிருப்பது ஆணவத்தின் உச்சம். இது கடுமையாக கண்டிக்கத்தக்கது. அந்த நாயின் கால் பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற செயலில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்று கூறியுள்ளார்.
இந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.