திரையரங்குகளில் ஐபிஎல் போட்டிகள் ஒளிபரப்பப்படுமா?
கொரோனா காரணமாக திரையரங்குகள் சுமார் ஆறு மாதங்களாக மூடியுள்ள நிலையில், எப்போது தியேட்டர்களுக்கு தளர்வு அளிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு அனைவர் மத்தியிலும் உள்ளது.
இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்க உள்ள ஐபிஎல் போட்டிகள் திரையரங்குகளில் ஒளிபரப்பப்பட வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்தது. இதற்கு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ பதில் அளித்துள்ளார்.
திரையரங்குகளில் ஐபிஎல் போட்டிகள் ஒளிப்பரப்ப தற்போது அனுமதியளிக்க வாய்ப்பு இல்லை என அவர் கூறியுள்ளார். திரையரங்குகள் திறப்பது பற்றி முடிவு எடுக்காத நிலையில் ஐபிஎல் ஒளிப்பரப்புவது பற்றி பேசுவது சரியாக இருக்காது என கூறியுள்ளார்.
சமூக இடைவெளியுடன் உள்ளவற்றுக்கு தான் தளர்வு அளிக்கபட்டுள்ளது என்று கூறிய அமைச்சர் திரையரங்குகளில் மக்கள் மூன்று மணி நேரம் இருக்கும் சூழல் உள்ளதால், தற்போது திரையரங்குகள் திறப்பது குறித்து முடிவு எடுக்க வாய்ப்பில்லை எனக் கூறினார்.
திரையரங்கு திறப்பது பற்றி மத்திய அரசு வழிகாட்டுதல் நெறிமுறைகள் வழங்கியுள்ளது என்றும், இங்குள்ள நிலைமையை ஆராய்ந்து, கண்காணித்து அரசு திரையரங்கு திறப்பது பற்றி முடிவு செய்யும் என அமைச்சர் கூறியுள்ளார். அதன் பின்னர் ஐ.பி.எல் ஒளிப்பரப்பு குறித்து பரீசிலனை செய்யப்படும் என கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
newstm.in