இனி பெருமளவில் வாக்காளர்களை நீக்கினால் தலையிடுவோம்: சுப்ரீம் கோர்ட்..!
பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கு சில மாதங்களே இருக்கும் நிலையில் பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி நடைபெற்று வருகிறது. இந்த திருத்தப் பட்டியல் வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி வெளியிடப்படும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணியை எதிர்த்து காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், திரிணமூல் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், ஏடிஆர் தொண்டு நிறுவனம் உட்பட பல்வேறு தரப்பில் 11 மனுக்கள் சுப்ரீம் கோர்ட்த்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் சூர்ய காந்த், ஜோய்மல்யா பக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இந்த மனுக்கள் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், பிரசாந்த் பூஷன் உள்ளிட்டோர் ஆஜராகினர். தேர்தல் ஆணையம் சார்பில் மூத்த வழக்கறிஞர் ராகேஷ் திவேதி ஆஜரானார்.
மனுதாரர்கள் தரப்பில் வாதிட்ட கபில் சிபல் "வரைவு வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்ட பெயர்கள் அடங்கிய பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும். அப்போதுதான், அவர்கள் யார் என்பது குறித்து நாங்கள் தெரிந்துகொள்ள முடியும். என வாதிட்டார். இதற்கு பதில் அளித்துப் பேசிய ராகேஷ் திவேதி, நீக்கப்பட்ட பெயர்கள் குறித்த பட்டியல் இணையதளத்தில் இருந்து தெரிந்துகொள்ள முடியும் என தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி ஜோய்மல்யா பக்சி, "தேர்தல் ஆணையம் ஓர் அரசியலமைப்பு நிறுவனம். அது சட்டத்தின்படி சரியாகச் செயல்படும் என்ற எண்ணம் உள்ளது. ஒருவேளை அவர்கள் அதில் இருந்து விலகுவார்களேயானால், வாக்காளர் பட்டியலில் பெயர்கள் பெருமளவில் நீக்கப்பட்டால் நாங்கள் நிச்சயம் தலையிடுவோம்" என தெரிவித்தார். இதையடுத்து, வழக்கின் அடுத்த விசாரணை ஆகஸ்ட் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்டது.