1. Home
  2. தமிழ்நாடு

நான் குடியிருக்கும் பகுதிக்கு தண்ணீர் தொடர்ந்து கிடைக்குமா..? வேல்முருகன் சட்டமன்றத்தில் கேள்வி

Q

தமிழக சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை குறித்த விவாதம் நடைபெற்று வருகிறது. அப்போது, பண்ருட்டி தொகுதி எல்எல்ஏ வேல்முருகன் கேள்வி ஒன்றை எழுப்பினார். “சென்னை மாநகரின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக எங்களுடைய வீராணம் பகுதியில் இருந்து கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலமாகவும், என்னுடைய தொகுதியில் 54 ராட்சத போர்களை அமைத்து பம்பிங் சிஸ்டம் மூலமாக சென்னை நகருக்கு தண்ணீர் வழங்கிக் கொண்டிருக்கிறோம். ஆனால், நான் வாழ்கின்ற வளரசவாக்கம், வார்டு 150, 11வது மண்டலத்தில் தண்ணீர் வசதி முறையாக இல்லை.
கடந்த 12 ஆண்டுகளாக, மாதத்திற்கு 2 முறை லாரித் தண்ணீரை விலைகொடுத்து வாங்கி வருகிறேன். திமுக ஆட்சி வந்த பிறகு அரசின் கவனத்திற்கு கொண்டு வந்தபிறகு தண்ணீர் தருகிறார்கள். ஆனால், அந்த தெருவுக்கு தடையின்றி தண்ணீர் வழங்க அமைச்சர் உத்தரவிட வேண்டும். தொடர்ந்து எனக்கு தண்ணீர் கிடைக்குமா என்றும் அறிய விரும்புகிறேன்” என்று சிரித்தப்படியே சட்டமன்றத்தில் கேள்வி கேட்டார்.
இதற்குப் பதிலளித்த நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு, “சென்னையை பொறுத்தவரையில் செம்பரம்பாக்கம், பூண்டி, புழல், தேர்வார்கண்டிகை, வீராணம் என 5 திட்டங்கள் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. செம்பரம்பாக்கத்தில் இருந்து 250 எம்எல்டி தண்ணீரை கொடுத்துக் கொண்டிருக்கிறோம். தற்போது தேசிய நெடுஞ்சாலையில் குடிநீர் குழாய் பதிக்கும் பணி கடந்த 7 ஆண்டுகளாக நடந்து வருகிறது. இன்னும் 7 மாதத்திற்குள் முடித்து தருவதாக நேரம் கேட்டுள்ளனர். இந்த பணி முடியுமானால், 500 எம்எல்டி தண்ணீர் செம்பரம்பாக்கத்தில் இருந்து கொடுக்க முடியும்.
அதையும் தாண்டி 150 எம்எல்டி கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை முதல்வர் நாளை தொடக்கி வைக்க உள்ளார். சென்னை மாநகரில் எல்லா பகுதிகளுக்கும் சீரான தண்ணீர் விநியோகம் செய்வதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம். எம்எல்ஏவின் வேண்டுகோளை ஏற்று தினமும் தண்ணீர் தருவதற்கான நிலைமையை உருவாக்கித் தருவோம்” என்று பதில் அளித்தார்

Trending News

Latest News

You May Like