இனி தங்கம் விலை கூடுமா? குறையுமா? பொருளாதார நிபுணர் சொல்லும் பாயிண்ட்!
தங்கம் விலை புதிய உச்சத்தை எட்டி, தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வரும் நாட்களில் தங்கம் விலை அதிகரிக்குமா? குறையுமா? என மக்கள், நகைப் பிரியர்கள் மத்தியில் மிகப்பெரிய கேள்வி உள்ளது. நகை வாங்க இது சரியான நேரமா என பலரும் ஆலோசித்து வருகின்றனர். இந்நிலையில், பொருளாதார நிபுணர் வ.நாகப்பன், தங்கம் விலை வாய்ப்புகள் குறித்துப் பேசியுள்ளார்.
"தங்கம் விலை கடந்த சில வாரங்களாக ஏறுவதும் இறங்குவதுமாக இருந்து வந்தது. தற்போது இன்று தங்கம் விலை மேலெழத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 2750 அமெரிக்க டாலர் என்ற அளவில் காணப்படுகிறது. இதே நிலை இருந்தால் குறைந்தபட்சம் 5% தங்கம் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
இந்த ஆண்டு முழுவதும் தங்கம் விலை அதிகரிக்கக்கூடும். இந்த ஆண்டு முழுவதும் சுமார் 10% விலை அதிகரித்து அடுத்த ஒன்றரை ஆண்டுக்குள் ஒரு அவுன்ஸ் தங்கம் 3100 அமெரிக்க டாலர்களை தொடுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன.அமெரிக்காவில் கடன் பத்திரங்கள் மீதான வருவாய் குறையத் தொடங்கியுள்ளது. அதன் தாக்கம் தங்கம் விலையில் எதிரொலிக்கும். கடன் பத்திரங்களை விற்று, அவற்றை தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரித்துள்ளது. கடந்த சில வாரங்களாக பிட் காயின் மதிப்பு அதிகரித்தபோது தங்கம் விலை பெரிதாக ஏறவில்லை. ஆனால், இப்போது மேலே எழத் தொடங்கி இருப்பதால், இனி ஏற்றத்தை எதிர்பார்க்கலாம்.
சர்வதேச சந்தையில் 2 காரணிகளால் தங்கம் விலை அதிகரிக்கும். ஒன்று தங்கம் வாங்குவதால் டிமாண்ட் காரணமாக அதிகரிக்கும். மற்றொன்று, டாலரின் மதிப்பு குறைந்தால் தங்கம் விலை அதிகரிக்கும். ஓரிரு நாட்களுக்கு முன்பு வரை அமெரிக்க டாலர் இண்டெக்ஸ் 110க்கு அருகில் இருந்த நிலையில் இன்று 107.75 ஆக குறைந்துள்ளது. இதனாலும் தங்கத்தின் மதிப்பு உயரும்.
முதலீட்டாளர்களைப் பொறுத்தவரை தங்கத்தில் முதலீடு செய்வது நல்ல வாய்ப்பு. ஆபரண தங்கம் வாங்குபவர்கள் நேரம், காலம் பார்க்காமல், எப்போது வாய்ப்பு இருக்கிறதோ அப்போது வாங்கி விடுவது நல்லது. டாலருக்கு மாற்றாக தங்கத்தில் உலக நாடுகள் முதலீடு செய்திருக்கின்றன. தங்கம் தேவை என இருப்பவர்கள், நாள் கணக்கில் ஏற்ற இறக்கங்களை பார்க்காமல் உடனடியாக வாங்குவது நல்லது." எனத் தெரிவித்துள்ளார். இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீடு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு, உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.