இப்படி கூட மரணம் வருமா ? மொபைல் சார்ஜ் போட்ட இளைஞர் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு!

தெலங்கானா மாநிலம் கமாரெட்டி மாவட்டத்தை சேர்ந்தவர் மாலோத் அனில் (23). இவர் நேற்று தனது செல்போனில் சார்ஜ் போட்டுவிட்டு, ஸ்விட்ச் ஆஃப் செய்யாமல் அந்த ஒயரை அப்படியே தொங்கவிட்டு தூங்கியுள்ளார். ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த போது எதிர்பாராத விதமாக அவரது கை சார்ஜரில் பட்டுள்ளது. அப்போது சார்ஜர் மின்கம்பியில் இருந்து மின்சாரம் பாய்ந்ததை அடுத்து அலறியுள்ளார்.
இதனையடுத்து படுகாயமடைந்த மகனை பெற்றோர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மற்றொரு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.