இப்படி கூட மரணம் வருமா ? நூடுல்ஸ் சாப்பிட்ட இளைஞர் பலி..!

விழுப்புரம் மாவட்டம், கீழ்பெரும்பாக்கம் திருப்புகழ் தெருவில் வசித்து வந்தவர் மனோஜ் குமார் (24). இவர் விழுப்புரத்தில் உள்ள தனியார் துணிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் மனோஜ் குமார் கடந்த 3 நாட்களாக வயிற்றுப்போக்கால் அவதிப்பட்டு வந்துள்ளார். இருப்பினும், நேற்றிரவு தனக்கு பிடித்த நூடுல்ஸை அதிகமாக சாப்பிட்டுள்ளார். அதனை தொடர்ந்து இரவு மூச்சுத்திணறல் ஏற்படவே முண்டியம்பாக்கத்தில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அப்போது இளைஞரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். அதனை தொடர்ந்து அவரது உடலை மருத்துவர்கள் பிரேதப் பரிசோதனை செய்த போது, மனோஜ் குமார் 3 நாட்களாக வயிற்று போக்கால் பாதிக்கப்பட்டிருந்த போதிலும், தொடர்ந்து வயிறு முட்டும் அளவிற்கு நூடுல்ஸை சாப்பிட்டதால் செரிமானம் ஆகாமல் உயிரிழந்தது தெரிய வந்தது.
இளைஞர் அளவிற்கு அதிகமாக நூடுல்ஸை உட்கொண்டு செரிமானம் ஆகாமல் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் குறித்து நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரனை நடத்தி வருகின்றனர்.