இப்படி கூட மரணம் வருமா ? தொண்டையில் நூடுல்ஸ் சிக்கி 8 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழப்பு..!
கேரளா இடுக்கி மாவட்டம் அடிமாலி பகுதியை சேர்ந்த தம்பதியினர் சோஜன் மற்றும் ஜினா. இவர்களுக்கு ஜோவானா என்ற 8 வயது மகள் இருந்துள்ளார்.
இவர், அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 3 -ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு தனது வீட்டில் நூடுல்ஸ் உணவை ஜோவானா சாப்பிட்டுள்ளார்.அப்போது, தொண்டையில் உணவு சிக்கிக் கொண்டதால் சிறுமிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால், சிறுமி மயங்கி விழுந்துள்ளார்.
பின்னர், சிறுமியை உடனடியாக அடிமாலியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதையடுத்து, அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக இடுக்கி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.