நாளை வங்கிகள் செயல்படுமா..? 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் வேலை நிறுத்தம்..!
விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை, தொழிலாளர் விரோதச் சட்டங்கள் உட்பட 17 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய தொழிற்சங்கங்கள் கூட்டாக 9ஆம் தேதி நாடு தழுவிய வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளது.
பொதுத்துறை நிறுவனங்க ளின் பங்குகளை விற்காதே, காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஒப் பந்த, அவுட்சோர்சிங் முறையை ஒழிக்க வேண்டும். பெட்ரோல், டீசல், கேஸ் விலை, ஜிஎஸ்டி வரி மற்றும் சுங்கக்கட்ட ணத்தைக் குறைத்திட வேண்டும் உள் ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி யும், ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து ஜூலை 9ஆம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தம் நடைபெறுகிறது.
இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில், அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்துடன் (AIBEA) இணைந்த வங்காள மாகாண வங்கி ஊழியர் சங்கம், AIBEA, AIBOA மற்றும் BEFI உள்ளிட்ட வங்கித் துறை தொழிற்சங்கங்களும் பங்கேற்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நாடு தழுவிய அளவில் நடைபெற இருக்கும் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில், பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஊழியர்கள் மொத்தமாக 15 கோடி தொழிலாளர்கள் பங்கேற்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள், அரசுப் பேருந்து மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள், மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் எனப் பெருமளவிலானோர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜூலை 9 அன்று நடைபெறவுள்ள இந்த வேலைநிறுத்தம், தமிழகம் முழுவதும் பொது வாழ்க்கையைப் பாதிக்க வாய்ப்புள்ளது.குறிப்பாக, அரசுப் போக்குவரத்து சேவைகள், வங்கிப் பணிகள், அரசு அலுவலகச் செயல்பாடுகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் பாதிக்கப்படலாம்
தொழிற்சங்கங்கள் முன்வைத்துள்ள 17 அம்சக் கோரிக்கைகளில், குறைந்தபட்ச ஊதிய உயர்வு, பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதைக் கைவிடுதல், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்தல், ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரப்படுத்துதல், தொழிலாளர் சட்டத் திருத்தங்களை வாபஸ் பெறுதல் போன்ற பல முக்கிய அம்சங்கள் அடங்கும். இக்கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் போராட்டங்கள் தொடரும் என தொழிற்சங்கத் தலைவர்கள் எச்சரித்துள்ளனர்.