விரைவில் ஆட்டோ கட்டணம் உயருகிறதா ?

தமிழகத்தில் ஓடும் ஆட்டோக்களுக்கு, 2013ம் ஆண்டு, 1.8 கி.மீ., துாரத்திற்கு 25 ரூபாய்; அடுத்த ஒவ்வொரு கி.மீ.,க்கும் தலா 12 ரூபாய்; காத்திருப்பு கட்டணம் ஐந்து நிமிடத்துக்கு 3.50 ரூபாய்; இரவு நேரத்தில் இரட்டிப்பு கட்டணம் என வசூலிக்க அனுமதித்து, போக்குவரத்துத் துறை உத்தரவு பிறப்பித்தது.
இந்த கட்டணத்தை நிர்ணயம் செய்து, 10 ஆண்டுகள் ஆகி விட்ட நிலையில், போக்குவரத்து ஆணையரக அதிகாரிகள் கூறியதாவது: ஆட்டோக்களுக்கு டிஜிட்டல் மீட்டர் வழங்கும் திட்டத்தை கைவிட்டுள்ளோம். இதற்கு, மாற்றாக பிரத்யேக செயலியை கொண்டு வர திட்டமிட்டுள்ளோம்.
ஆட்டோ நல வாரியத்தில் பதிவு செய்துள்ள விபரங்களை சேகரித்து, பிரத்யேக செயலி உருவாக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதுவரை, 1.70 லட்சம் தொழிலாளர் விபரங்களை சேகரித்துள்ளோம்.
தற்போதுள்ள மொபைல் போன் செயலியை போலவே, பயணியர், ஆட்டோ முன்பதிவு செய்து, பயணம் செய்யும் வகையில், பிரத்யேக செயலி, வரும் டிசம்பருக்குள் கொண்டு வர திட்டமிட்டுள்ளோம். அரசு நிர்ணயிக்கும் கட்டணத்தில் பயணம் செய்யும் வகையில், இந்த செயலி உருவாக்கப்படும். அதே நேரத்தில், ஆட்டோ கட்டணத்தை மாற்றியமைப்பது குறித்து, அரசு முடிவு செய்யும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.