1. Home
  2. தமிழ்நாடு

சட்டப்பேரவை நிகழ்வு நேரலை செய்யப்படவில்லை ஏன்? சபாநாயகர் விளக்கம்..!

1

தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் திங்கள்கிழமை (ஜன. 6) கூடியது. புத்தாண்டின் முதல் கூட்டத்தொடா் என்பதால் கவர்னர் உரையுடன் கூட்டம் தொடங்குவது வழக்கம். இதற்காக கவர்னர் ஆர்.என். ரவி நேற்று காலை பேரவை மண்டபத்துக்கு வருகை தந்தார். அவரை பேரவைத் தலைவா் மு.அப்பாவு வரவேற்றார். தொடர்ந்து சட்டப்பேரவை தொடங்கியதும் கவர்னர் ஆர்.என்.ரவி தனது உரையை நிகழ்த்துவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கவர்னர் திடீரென அவையில் இருந்து வெளியேறினார்.

தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டவுடன் தேசிய கீதம் இசைக்கப்படவில்லை என்பதால் கவர்னர் வெளியேறியதாகத் தெரிவிக்கப்பட்டது. தமிழ்த்தாய் வாழ்த்துக்குப் பின்னர் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்று கவர்னர் கூற, அதற்கு முதல்வர், பேரவைத் தலைவர் மறுத்துவிட்டதால் கவர்னர் வெளியேறியதாக கவர்னர் மாளிகை விளக்கம் தெரிவித்துள்ளது.

இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பேரவைத் தலைவர் அப்பாவு, கவர்னர் வெளியேறிய விவகாரம் குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது  அப்பாவு தெரிவித்தாவது:-

அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் நீதி கேட்டு சட்டப்பேரவைக்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் கருப்பு பேட்ச் அணிந்து வந்திருந்தார்கள். அ.தி.மு.க.வி.னர் கையில் பதாகைகளுடன் வந்திருந்தார்கள். கவர்னர் எழும்பும்போதுதான் மற்ற கட்சியினர் பதாகைகளைக் காட்டினார். பல்கலைக்கழக வேந்தர் என்ற முறையில் அவருக்கு எதிராகக் காட்டினார்களா எனத் தெரியவில்லை. அவர்களுக்கு பேசவும் வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பதால் அவர்கள் யாருக்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள் என்று தெரியவில்லை.

கவர்னர் உரைக்கு குந்தகம் விளைவிக்கும் வண்ணம் ஒரு கலவர நோக்கத்துடன் செய்ததால் அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியின் உறுப்பினர்களை வெளியேற்றினோம். ஆளுநருக்கு மதிப்பளித்துதான் அவர்களை வெளியேற்றினோம். அரசமைப்பு விதி 176 (1) இன்படி, கவர்னர் உரை வாசிக்கப்பட்டிருக்க வேண்டும். கவர்னர் தனது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றியிருக்க வேண்டும். தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இவ்வாறு செய்திருக்கிறார். இதற்கு அவையில் தீர்மானம் நிறைவேற்றி கண்டனம் செய்திருக்கிறோம்.

சட்டப்பேரவை நிகழ்வுகள் மரபுப்படி நடைபெறுகிறது. இதுவரை எந்த ஆளுநரும் இப்படிச் செய்ததில்லை. 1995-ல் கவர்னர் சென்னா ரெட்டி கவர்னர் உரையை வாசிக்காதபோது அவரை திரும்ப பெற வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தீர்மானம் நிறைவேற்றினார். புதிய ஆளுநரை நியமிக்கும்போது அரசிடம் பரிந்துரை கேட்க வேண்டும் என்றும் கூறினார். பின்னர் 1996 பிப்ரவரியில் கவர்னர் உரை நடந்தது.

பேரவைத் தலைவராகிய நான் சென்று கவர்னருக்கு முறையாக அழைப்பு விடுத்தேன். அவர்களும் மகிழ்ச்சியாக உபசரித்தார்கள். அரசியலமைப்புப் படி கவர்னருக்கு மரியாதை அளித்தோம். சட்டப்பேரவை மரபுப்படி, தமிழக கலாசாரப்படி முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து, நிகழ்ச்சி நிறைவு பெறும்போது தேசிய கீதம் இசைக்கப்படும். தமிழ்நாட்டில் அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும் இப்படித்தான் நடக்கிறது. எனவே, சட்டப்பேரவை நிகழ்வுகளும் அவ்வாறே நடைபெறும். தமிழ்நாட்டு மரபுகளை மாற்ற முடியாது. கவர்னர் வரும்போதே இங்கு தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்றால் என்ன செய்வது?

தெலங்கானாவில் ஒருமுறை கவர்னராக இருந்த தமிழிசை சௌந்தரராஜனுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. அவரும் வரவில்லை, அங்கு சட்டப்பேரவை நடக்கவில்லையா? இதே கவர்னர் இருந்தால் அடுத்த ஆண்டும் இதே மாதிரிதான் நடைபெறும்' என்றார். நேரலை செய்யப்படவில்லை ஏன்? என செய்தியாளர்கள் கேட்டதற்கு, 'சட்டப்பேரவையில் நிகழ்ந்த தகராறில் என்ன தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது என்று தெரியவில்லை. எனக்கு தெரியாது, நான் கேட்டுச் சொல்கிறேன். நீங்கள் நேரலை செய்கிறீர்கள் என்று நான் நினைத்துக்கொண்டிருக்கிறேன்' என்றார். மேலும் கவர்னர் அவையை அவமதிப்பது பாராளுமன்றத்திலோ பாஜக ஆளும் மாநிலங்களிலோ இப்படி ஏதாவது நடந்திருக்கிறதா? என்றும் கேள்வி எழுப்பினார்.

Trending News

Latest News

You May Like