தஞ்சை தமிழ் துணைவேந்தர் திருவள்ளுவன் சஸ்பெண்ட் செய்யப்பட்டது ஏன்..? முழு விவரம்
துணைவேந்தர் திருவள்ளுவனின் பதவிக்காலம் டிச. 12-ல் முடிவடையும் நிலையில், அவரைச் சஸ்பெண்ட் செய்து ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவில் கூறியிருப்பதாவது:
தமிழ்ப் பல்கலை.யில் 2017, 2018-ம் ஆண்டுகளில் விதிகளை மீறிப் பேராசிரியர்கள், இணை பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டிருப்பதாகப் பல்கலை. வேந்தருக்கு புகார்கள் வந்தன. அவற்றின் மீது விசாரணை நடத்தவும், சம்பந்தப்பட்ட ஆசிரியர்களின் கல்வித் தகுதியை ஆய்வு செய்யவும் நிபுணர் குழுவை அமைக்குமாறு துணைவேந்தருக்கு, பல்கலை. வேந்தர் உத்தரவிட்டார். இதையடுத்து அமைக்கப் பட்ட நிபுணர் குழுவின் அறிக்கையை 2021 ஆக. 11-ம் தேதி வேந்தரிடம் சமர்ப்பித்தார் துணை வேந்தர். விதிகளை மீறி ஆசிரியர் நியமனம் நடந்திருப்பது அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப் பட்டிருந்தது. இதற்குக் காரணமானவர்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு வேந்தர் உத்தரவிட்டார். இதையடுத்து துணைவேந்தர் ஓர் அறிக்கை சமர்ப்பித்தார்.
ஆனால், முறைகேடான நியமனம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டிய கடமையிலிருந்து துணைவேந்தர் தவறிவிட்டார். இந்தப் பிரச்சினை தொடர்பாக நீதிமன்றத்தில் பொது நலன் வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், துணைவேந்தர் திருவள்ளுவன் உரிய நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு 27.10.2023 அன்று தகுதி காண்பருவ நிறைவு வழங்கியுள்ளார்.
ஆசிரியர் நியமன முறைகேடு தொடர்பாக நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று கேட்டும், 15 நாட்களில் விளக்கம் அளிக்குமாறும் துணைவேந்தருக்கு கடந்த அக். 3-ம் தேதி நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதற்கு அக். 16-ம் தேதி பதில் அளித்த துணை வேந்தர், நோட்டீஸ் குறித்து விளக்கம் அளிப்பதாகக் கூறியுள்ளார். அவர் அளித்த விளக்கம் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில், சட்டவிரோத நியமனம் தொடர்பாகத் துணைவேந்தர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதும், விதிளை மீறி அந்த ஆசிரியர்களுக்குத் தகுதிகாண் பருவ நிறைவு வழங்கியதும் தெரியவருகிறது. எனவே, இந்த விவகாரம்குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வேந்தர் கருதுகிறார். இந்தச் சட்ட விரோத நியமனத்தில் பாரபட்சமில்லாத விசாரணை நடைபெற வேண்டியுள்ளதால், பல்கலை. துணைவேந்தர் வி.திருவள்ளுவன் உடனடியாகச் சஸ்பெண்ட் செய்யப்படுகிறார்.
மேலும், 2017, 2018-ம் ஆண்டுகளில் 40 பேராசிரியர்கள், இணை பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள் விதிகளை மீறி நியமனம் செய்யப்பட்டது குறித்து விசாரணை நடத்த சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி எம்.ஜெயச்சந்திரன் நியமிக்கப்படுகிறார். இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.