தமிழ்நாட்டில டாஸ்மாக் கடைகள் இயங்கும் நேரம் மாற்றம் ஏன்..? புதிய தகவல்கள்

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகம் இருந்த காரணத்தால், கடந்த ஆண்டு டாஸ்மாக் மதுக்கடைகள் பகல் 12 மணிக்கு தொடங்கி இரவு 10 மணி வரை செயல்பட்டு வந்தன. இதனிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு டாஸ்மாக் கடைகள், காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்கும் என அறிவிக்கப்பட்டது
இந்த நிலையில் டாஸ்மாக் கடைகள் இயங்கும் நேரம் மாற்றப்படுவதாக டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகள் மீண்டும் பகல் 12 மணியில் இருந்து இரவு 10 மணி வரை இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்கி வந்த நிலையில் நேரம் மாற்றப்பட்டு உள்ளது.
இதற்கு தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. “இரவு 10 மணி வரை கடைகள் செயல்படும்போது, விற்பனை கணக்கு முடிக்க இரவு 11 மணிக்கு மேல் ஆகும். இதனால், விற்பனை பணத்தை கொள்ளையடிக்கும் சம்பவங்கள் அதிகரிக்கும். ஊழியர்கள் தாக்கப்படுவது அதிகரிக்கும்.எனவே, மதுக்கடைகள் இயங்கும் நேரத்தை காலை 10 மணி முதல்இரவு 8 மணி வரை என்றே மாற்றியமைக்க வேண்டும்” என்று தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்க மாநில தலைவர் நா.பெரியசாமி, சிஐடியு சம்மேளன பொதுச் செயலாளர் கே.திருச்செல்வன் உள்ளிட்டோர் வலியுறுத்தியுள்ளனர்.
வழக்கமாக இரவு 8 முதல் 10 மணிக்குள்தான் மது அதிகம் விற்பனையாகும். ஆனால், தற்போது 8 மணிக்கே கடைகள் அடைக்கப்படுவதாலும், கடைகள் குறைக்கப்பட்டதாலும், செப்டம்பர் மாத புள்ளிவிவரத்தின்படி, அரசுக்கு சுமார் ரூ.7 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டது. இதை கருத்தில் கொண்டுதான் இரவு 10 மணி வரை கடைகளை இயக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.