1. Home
  2. தமிழ்நாடு

சுனில் குமார் நியமனம் ஏன்? தமிழக அரசு பதில்

Q

தமிழக சீருடை பணியாளர் தேர்வு வாரியம் என்பது சீருடை பணிகளுக்கான தேர்வுகளை நடத்தி வருகிறது. அதன்படி காவல் சார்பு ஆய்வாளர் (தாலுகா, ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்புக் காவல் படை) மற்றும் நிலைய அதிகாரி (ஒருங்கிணைந்த தேர்வு), காவல் சார்பு ஆய்வாளர் (தொழில் நுட்பம்), காவல் சார்பு ஆய்வாளர் (விரல் ரேகை) தேர்வுகளை நடத்தி வருகிறது.

மேலும் இரண்டாம் நிலைக் காவலர்கள், இரண்டாம் நிலை சிறைக் காவலர்கள் மற்றும் தீயணைப்பாளர்கள் (பொதுத்தேர்வு) உள்ளிட்ட தேர்வுகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் தான் தமிழக சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தின் தலைவராக ஓய்வு பெற்ற டிஜிபி சுனில் குமார் நியமனம் செய்யப்பட்டர்.

இந்நிலையில், சுனில்குமாரின் நியமனத்தை ரத்து செய்யக் கோரி அதிமுக வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் ஐ.எஸ்.இன்பதுரை சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் தலைவராக பதவியில் இருக்கும் அல்லது ஓய்வு பெற்ற டிஜிபியை நியமிக்கும் வகையில் கடந்த 1991ம் ஆண்டு சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் தலைவராக சீமா அகர்வால் மூன்று ஆண்டுகளுக்கு மேல் வாரியத்தின் தலைவராக பதவி வகித்ததாகவும் அதன் காரணமாகவே அவர் மாற்றப்பட்டு சுனில்குமார் நியமிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2012-2020ம் ஆண்டு வரை பல்வேறு காலக்கட்டங்களில் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் உறுப்பினர் செயலராக சுனில்குமார் இருந்துள்ளதாகவும் அதனால் அவருக்கு அந்த துறை குறித்து அவர் நன்கு அறிந்து வைத்திருப்பதாலும் அவர் வாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் தற்போது டிஜிபி அந்தஸ்தில் உள்ள பதினோரு அதிகாரிகளும் மற்ற துறைகளில் பணியாற்றி வருவதால் ஓய்வு பெற்ற டிஜிபி சுனில்குமார் வாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட்டதாகவும் பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.

பதில் மனு தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து வழக்கின் விசாரணையை மார்ச் 17ம் தேதிக்கு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் ஒத்திவைத்தார்.

Trending News

Latest News

You May Like