நாய் ஏத்துற வண்டியில் நாங்க ஏன் ஏறணும்? போலீசார் வாகனத்தில் ஏற மறுத்த எச்.ராஜா..!

டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி அளவிற்கு முறைகேடு நடந்திருப்பதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டியது. இதனையடுத்து மதுவிலக்கு, ஆயத்தீர்வை மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் பதவி விலக வலியுறுத்தி தமிழக பாஜக சார்பில் சென்னை எழும்பூர் டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் இன்று நடைபெறும் என்று அண்ணாமலை அறிவித்திருந்தார்.
ஆனால், காவல்துறை தரப்பில் இந்த போராட்டத்திற்கு அனுமதி அளிக்கப்படவில்லை. எனவே, டாஸ்மாக் தலைமை அலுவலகம் நோக்கி வந்த பாஜக தொண்டர்களை காவல்துறையினர் கைது செய்தனர். சென்னை சாலிகிராமத்தில் இருந்து போராட்டம் நடைபெறும் இடத்திற்கு செல்ல முயன்ற தமிழிசை செளந்தரராஜனை போலீசார் ஹவுஸ் அரெஸ்ட் செய்தனர்.
சென்னை பனையூரில் உள்ள தனது இல்லத்தில் இருந்து காரில் வந்த அண்ணாமலையை அக்கரை அருகே போலீசார் தடுத்தி நிறுத்தி கைது செய்தனர். ஈசிஆர் நெடுஞ்சாலையில் உள்ள கோபிநாத் கார்டனில் அண்ணாமலை அடைக்கப்பட்டுள்ளனர். அதேபோல பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் வானதி சீனிவாசன், சரஸ்வதி மற்றும் சட்டமன்றம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரும் கைது செய்யப்பட்டனர்.
இந்த போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக காலை 10.30 மணிக்கு சென்னை விமான நிலையத்திற்கு வந்தார் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா. அவரை விமான நிலையத்தில் வைத்தே கைது செய்ய போலீசார் திட்டமிட்டிருந்தனர். இதனால் அவரை பிக்அப் செய்ய வந்த காரை போலீசார் சூழ்ந்திருந்தனர். இதை அறிந்த ஹெச்.ராஜா, வேறு ஒரு காரில் ஏறி புறப்பட்டு சென்றுவிட்டார்.
இதனையடுத்து போலீசார் ஹெச்.ராஜா வீட்டிற்கு சென்றனர். ஆனால், அவர் வீட்டில் இல்லை, வீடு பூட்டப்பட்டு இருந்தது. இதனால் ஹெச்.ராஜா எங்கே சென்றார் என்று தெரியாமல் அவரை கைது செய்ய போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்தநிலையில், சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்திற்கு போராட்டத்தில் ஈடுபட வந்த ஹெச்.ராஜாவை போலீசார் கைது செய்ய முற்பட்டனர். அப்போது அவர், “என்னை ஏன் கைது பண்றீங்க. செந்தில் பாலாஜியை கைது பண்ணுங்க. நாய் ஏத்துற வண்டியில நான் ஏற மாட்டேன்” என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தொடந்து ஹெச்.ராஜாவை கைது செய்த போலீசார் அரசு பேருந்தில் அழைத்து சென்று அருகில் இருந்த தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.