1. Home
  2. தமிழ்நாடு

கிளாம்பாக்கம் பேருந்து முனையம் திறப்பதில் தாமதம் ஏன் ? அமைச்சர் சேகர்பாபு விளக்கம்..!

1

கிளாம்பாக்கத்தில் சுமார் 59.86 ஏக்கர் பரப்பளவில் ரூபாய் 393.74 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து முனையத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இங்கு புறநகர் பேருந்து நிலையம் மற்றும் வெளியூர் பேருந்து நிலையம் என 2 பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், ஆம்னி பஸ்களுக்கு என்று தனியாக பேருந்து நிலையமும் உள்ளது. இந்தப் பேருந்து முனையம் பயன்பாட்டுக்கு வந்த பிறகு கோயம்பேட்டில் இருந்து செல்லும் 60 சதவீத பேருந்துகளை கிளாம்பாக்கத்துக்கு மாற்றி இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

குறிப்பாக திருச்சி, மதுரை, கன்னியாகுமரி, கோயம்புத்தூர், சேலம் போன்ற இடங்களுக்குச் செல்வதற்கான அனைத்து பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் இருந்தே இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இம்முனையத்தில் புறநகர் பேருந்துகளுக்காக 28.25 ஏக்கர் பரப்பளவில் 226 புறநகர் பேருந்துகள் நிறுத்துவதற்காக 8 நடைமேடைகள் அமைக்கப்பட்டுள்ளன. புறநகர் பேருந்துகளுக்காக தனி பணிமனை உள்ளது. மாநகர பேருந்துகளுக்காக 7.40 ஏக்கர் பரப்பளவில் 11 நடைமேடைகளுடன் மாநகரப் பேருந்துகள் வந்து செல்வதற்கு வசதிகள் 60 அமைக்கப்பட்டுள்ளன. தனி அலுவலக கட்டிடம், பாதுகாகப்பட்ட குடிநீர் வசதி, 2 மின் தூக்கிகள், 2 நகரும் படிக்கட்டுகள், கழிவறைகள், மாகர பேருந்துகளுக்காக தனி பணிமனை போன்ற வசதிகள் உள்ளன.

2 அடித்தளம், தரைத்தளம் மற்றும் முதல் தளத்துடன் நவீன வசதிகளுடன் கூடிய பிரதான கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளன. அடித்தளத்தில் 2,769 இருசக்கர வாகனங்கள், 324 நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்த இட வசதி அமைக்கப்பட்டுள்ளன. தரைத்தளத்தில் 53 கடைகள், 2 உணவகங்கள், 2 துரித உணவகங்கள், அவசர சிகிச்சை மையம், மருந்தகம் பொருள் பாதுகாப்பு அறை, தாய்ப்பாலூட்டும் அறை, பயணச்சீட்டு வழங்கும் இடம், பணம் எடுக்கும் இயந்திரம், நேரக்காப்பாளர் அறை, கண்காணிப்பு கேமரா அறை, பொது கழிவறைகள் போன்ற அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

இந்தப் புதிய பேருந்து முனையம் "கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்" எனும் பெயரில் மக்கள் பயன்பாட்டிற்காக ஜூன் மாதம் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் பேருந்து நிலையம் தாமதம் ஆகி வருகிறது.

இந்நிலையில், சென்னையில் அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தொடர்பாக கேள்விக்கு பதில் அவர், "கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தை பொறுத்தளவில் உட்கட்டமைப்பு பணிகள் அனைத்தும் நிறைவு பெற்றுள்ளன. இப்பேருந்து முனையம் பயன்பாட்டுக்கு வந்தபின் ஏற்படும் போக்குவரத்து நெரிசல், பருவமழை காலங்களில் தண்ணீர் வடியும் வகையிலான மழை நீர் வடிகால்கள், அதிகளவு கூட்டம் சேருகின்ற நிலையில் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தவிர்க்கவும், சட்டம் - ஒழுங்கை பராமரிப்பதற்கும் காவல் துறை அலுவலகங்கள், மாற்றுப் பாதைகளாக தேர்வு செய்யப்பட்டு உள்ளது.

அயனஞ்சேரி முதல் மீனாட்சிபுரம் வரையிலும், சி.வே.கே.சாலை முதல் ஊரப்பாக்கம் - நல்லம்பாக்கம் வரையிலும், ஆதனூர் முதல் மாடம்பாக்கம் வரையிலும் சாலை அமைக்கும் பணிகள், வனத் துறையிடம் அனுமதி பெறுதல் போன்ற பணிகளை அமைத்திட கடந்த ஆட்சி காலத்தில் முறையாக திட்டமிடாததால் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. கிளாம்பாக்கம் பேருந்து முனையம் திறக்கப்பட்ட பிறகு மக்களுக்கு எந்த வகையிலும் அசெளகரிகங்கள் ஏற்படக் கூடாது என்பதற்காக திட்டமிட்டு அனைத்துப் பணிகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. விரைவில் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்" என்றார்.

Trending News

Latest News

You May Like