முத்தமிழ் கடவுளான முருகனுக்கு மாநாட்டு லோகோவில் பூணூல் எதற்கு? இடும்பவனம் கார்த்தி கேள்வி..!
முத்தமிழ் கடவுளான முருகனுக்கு மாநாட்டு லோகோவில் பூணூல் எதற்கு? என நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த இடும்பவனம் கார்த்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் அனைத்து உலோக முத்தமிழ் முருகன் மாநாடு வருகின்ற 24 மற்றும் 25ஆம் தேதி அருள்மிகு பழனி ஆண்டவர் கலை கல்லூரியில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் ஐந்து ஆய்வரங்கங்களில், 1300 பேர் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பிக்க உள்ளனர். இதில் வெளிநாட்டினர் 39 பேர் ஆய்வு கட்டுரை சமர்ப்பிக்கின்றனர். இது தவிர 30க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ள உள்ளனர். மேலும் 4 நீதி அரசர்கள், 15 ஆதீனங்கள், 30 ஆன்மீக சொற்பொழிவாளர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த மாநாட்டின் விழா மலர் மற்றும் ஆய்வு கட்டுரை மலர் என இரண்டு மலர்களாக வெளியிடப்படவுள்ளது. குறிப்பாக ஆன்மீக பேச்சாளரான சுகி.சிவம் கலந்து கொண்டு ஆன்மீக உரை ஆற்றவுள்ளார். இதுமட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களில் அமைச்சர்கள், ஆன்மீக அன்பர்கள், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்கவுள்ளனர். மேலும் 3டி வடிவில் திரைபடங்களாக 100 பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் ஏற்பாடு செய்யபடுகிறது. முருகன் பெருமை விளக்கும் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் முருகன் புகழை சொல்லும் கும்மியாட்டம் , கந்த சஷ்டி கவசம் , காலை 8.30 மணி முதல் மதியம் ஒரு மணி வரையிலும் பின்னர் 2 மணி முதல் இரவு 8 மணி வரை நிகழ்ச்சி திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் மாநாட்டை முன்னிட்டு 8 இடங்களில் அலங்கார வரவேற்பு ,தலைவர்கள் மாநாட்டு வரும் 8000 பக்தர்கள் அமைந்து பார்வையிடும் வகையில் பந்தல்கள் அமைக்கப்பட்டு உள்ளன. மாநாட்டு வந்து செல்பவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், பிரத்தியேகமாக கூடிய மருத்துவ வாகனங்கள், தேவையான அளவு பேருந்துகள் இயக்கவும், வருகின்ற நபர்களுக்கு உணவு, குடிநீர், மாற்றுத்திறனாளிகள் சக்கர நாற்காலிகள் ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் மாநாட்டுக்கான ஏற்பாடுகளை தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் செய்து வருகிறது. கடந்த 10 நாட்களுக்கும் மேலாக அதிகாரிகள் அங்கு முகாமிட்டு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் மாநாட்டையொட்டி தமிழக இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் மாநாட்டு இலச்சினை (லோகோ ) வெளியிடப்பட்டுள்ளது. பழனி மலைக்கோயில் பின்னணியில் இருக்க சேவல் மயிலுடன் கையில் வேல் கொண்டு ராஜ அலங்காரத்தில் முருகன் இருக்கும் வகையில் அந்த லோகோ வடிவமைக்கப்பட்டிருக்கிறது. மேலும் அனைத்து உலகை முத்தமிழ் முருகன் மாநாடு பழனி 2024 என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இதை வைத்துதான் பிரச்சனையை ஆரம்பித்திருக்கிறது நாம் தமிழர் கட்சி. ஏற்கனவே முருகனுக்காகத் தான் முத்தமிழ் மாநாடு பழனியில் நடக்கிறதா என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியிருந்தார். இந்த நிலையில் முத்தமிழ் கடவுளான முருகனுக்கு பூணூல் எதற்கு என கேள்வி எழுப்பி இருக்கிறார் அக்கட்சியை சேர்ந்த இடும்பவனம் கார்த்திக். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் அந்த லோகோவை பகிர்ந்திருக்கும் அவர், திமுக ஐடி விங்கையும் அறிவாலயத்தையும் குறிப்பிட்டு இந்த கேள்வியை எழுப்பி இருக்கிறார். இதையடுத்து நாம் தமிழர் கட்சியினர் பலரும் இந்த போட்டோவை பகிர்ந்து திமுகவினருக்கு கேள்வி எழுப்பி வருகின்றனர்.