கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும், பெட்ரோல் விலையைக் குறைக்காதது ஏன்?
பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப, உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலையை, தினமும் நிர்ணயம் செய்கின்றன. கடந்த சில நாட்களாகவே கச்சா எண்ணெய் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலையில் பெரிய மாற்றம் ஏதும் இல்லாமல் அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது.
இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் கார்கே சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கை: கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும், பெட்ரோல் விலையைக் குறைக்காதது ஏன்?. பா.ஜ., ஆட்சி வந்தபிறகு கச்சா எண்ணெய் 32 சதவீதம் குறைந்துள்ளது. கச்சா எண்ணெய் விலை 32.5% குறைந்தாலும், பெட்ரோல், டீசல் விலையைப் பா.ஜ., அரசு குறைக்க மறுக்கிறது.
தற்போதைய சந்தை நிலவரப்படி பெட்ரோல் ஒரு லிட்டர் ₹48.27க்கும், டீசல் ஒரு லிட்டர் ₹69.00 விற்கப்பட வேண்டும். 10 ஆண்டுகள் மற்றும் 100 நாட்களில், எரிபொருளுக்கு வரி விதித்து 35 லட்சம் கோடி ரூபாய்களை பா.ஜ., அரசு மக்களிடமிருந்து கொள்ளையடித்துள்ளது. பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்காத பா.ஜ., அரசை மக்கள் தேர்தலில் நிராகரிப்பார்கள். இவ்வாறு கார்கே கூறியுள்ளார்.
திரிணமுல் காங்., கேள்வி
திரிணமுல் காங்கிரஸ் எம்.பி., டெரிக் ஓ பிரையன் கூறியதாவது: கடந்த 10 ஆண்டுகளில் கச்சா எண்ணெய் விலை கடுமையாகச் சரிந்த போதும், பெட்ரோல் விலை 30 சதவீதம் அதிகரித்து உள்ளது.
இதனால் எண்ணெய் நிறுவனங்கள் அதிக பலன் அடைகின்றன. ஆனால் அதன் பலன் சாதாரண மக்களுக்குக் கிடைக்கவில்லை. சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும், பெட்ரோல் விலையைக் குறைக்காதது ஏன்? இவ்வாறு அவர் கூறியுள்ளார்.