தமிழ்நாடு ஏன் மாற்றாந்தாய் பிள்ளையாக நடத்தப்படுகிறது?நிதியமைச்சர் தங்கம் தென்னரசு
தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு விடுத்துள்ள அறிக்கையில், நேற்றைய தினம் கோவையில் பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது பேசிய ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னை மெட்ரோ ரயில்-II திட்டத்திற்கு ரூ.21,000 கோடி கடனுதவியை ஒன்றிய அரசு பெற்றுத் தந்தது என்றும், அதில் ரூ.5,880 கோடி மட்டுமே தமிழ்நாடு அரசு செலவு மேற்கொண்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார். இது தொடர்பான பின்வரும் சரியான மற்றும் முழுமையான தகவல்களை தெரிவிக்க வேண்டியது என்னுடைய கடமையாகும்.
இந்தியாவில் இதுவரை நடைமுறைப்படுத்தப்பட்ட மெட்ரோ ரயில் திட்டங்களிலேயே மிகப் பெரிய திட்டமாக 3 வழித்தடங்களுடன் 119 கி.மீ. நீளத்திலான மெட்ரோ ரயில் திட்டம் குறித்த ஒரு விரிவான திட்ட அறிக்கையினை மாநில மற்றும் ஒன்றிய அரசின் 50:50 என்ற சமபங்களிப்பு அடிப்படையில் இரு தரப்பு மற்றும் பன்னாட்டு நிதி நிறுவனங்களின் நிதியுதவி பெறுவதற்காக ஜனவரி 2019-ல் பரிந்துரை செய்யப்பட்டது. ஒன்றிய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புர விவகாரங்களுக்கான அமைச்சகத்தின் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான செலவு மதிப்பீடுகளின் அளவுகோலுக்கான அறிக்கையின் அடிப்படையில் அமைச்சகத்துடன் கலந்தாலோசித்து 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2-ஆம் கட்டத்தின் திட்ட மதிப்பீடு ரூ.63,246 கோடியாக மதிப்பிடப்பட்டது.
ஒன்றிய நிதி அமைச்சர் சென்னை மெட்ரோ ரயில் கட்டம்-II, State Sector Project-ஆக நடைமுறைப்படுத்தப்படுவதாக குறிப்பிட்டுள்ளார். இது குறித்த சரியான விவரத்தை அவருக்கு தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன். 2017-ஆம் ஆண்டு இத்திட்டத்தை ஒரு Central Sector Project ஆகவே நடைமுறைப்படுத்த தமிழ்நாடு அரசால் பரிந்துரை செய்யப்பட்டு ஒன்றிய அரசுக்கு அனுப்பப்பட்டது. பின்னர் ஜப்பான் நாட்டின் நிதி வழங்கும் JICA நிறுவனம் 2018-ஆம் ஆண்டு இத்திட்டத்தினை விரைந்து துவக்க கடன் ஒப்பந்தத்தை உடனடியாக கையெழுத்திட வேண்டும் என்று கேட்டுக் கொண்டதன் அடிப்படையில், ஏற்கனவே ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்ட திட்ட அறிக்கை ஒன்றிய அரசின் பரிசீலனையில் இருந்ததால், கடன் ஒப்பந்தத்தை குறிப்பிட்ட கால கட்டத்திற்குள் இறுதி செய்ய வேண்டிய சூழ்நிலையில், இத்திட்டத்தினை ஒன்றிய அரசின் Central Sector Project எனும் ஒப்புதலை எதிர்நோக்கி, காலதாமதத்தை தவிர்க்கும் நோக்கிலும் பொதுமக்கள் நலன் கருதியும் தமிழ்நாடு அரசே இம்மாபெரும் திட்டத்தை செயல்படுத்தத் தொடங்கியது.
இந்த வழிமுறையை ஒன்றிய அரசும் ஏற்றுக்கொண்டதன் அடிப்படையில் இத்திட்டம் ஒன்றிய அரசின் 17.08.2021 அன்று நடைபெற்ற பொது முதலீட்டு குழுவின் (Public Investment Board) கூட்டத்தில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, இத்திட்டம் Central Sector Project ஆக செயல்படுத்த ஒன்றிய அமைச்சரவைக்கு முன்மொழிந்தது என்பதை ஒன்றிய நிதியமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வர விழைகிறேன். ஒன்றிய நிதி அமைச்சரை நாங்கள் கேட்டுக் கொள்வதெல்லாம் ஒன்றிய அரசின் பொது முதலீட்டுக் குழு பரிந்துரைத்தபடி சென்னை மெட்ரோ ரயிலின் 2-வது கட்ட திட்டத்தினை, Central Sector Project ஆக அங்கீகரித்து ஒன்றிய அரசின் பங்கான ரூ.7,425 கோடியினை உடனடியாக வழங்கிட வேண்டும் என்பதேயாகும். மேலும் ஒன்றிய நிதி அமைச்சர் அவர்கள் ரூ.21,000 கோடி வெளிநாட்டு நிதி நிறுவனங்களின் கடன்களாக ஏற்பாடு செய்து தரப்பட்டுள்ள போதிலும் தமிழ்நாடு அரசு ரூ.5,880 கோடி மட்டுமே செலவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
உண்மையில் இதுவரை இத்திட்டத்திற்காக ரூ.18,564 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாடு அரசு இதுவரை தனது சொந்த நிதியிலிருந்து செலவிட்டுள்ள தொகை ரூ.11,762 கோடியாகும். வெளிநாட்டு நிதி நிறுவனங்களிடமிருந்து பெற்ற கடன் மூலமாக மேற்கொள்ளப்பட்ட செலவு ரூ.6,802 கோடியாகும். ஆனால் ஒன்றிய அரசின் பங்கான பொது முதலீட்டுக் குழுவினால் பரிந்துரைக்கப்பட்ட ஒன்றிய அரசின் பங்கான ரூ.7,425 கோடியில் ஒரு ரூபாய் கூட ஒன்றிய அரசால் இன்னும் விடுவிக்கப்படவில்லை. தமிழ்நாடு எவ்வாறு வஞ்சிக்கப்படுகிறது என்பதை இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் 2021-22ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையின்போது ஒன்றிய நிதி அமைச்சர் இந்தியாவில் நடைபெறும் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு குறித்து பேசும்போது கொச்சி, சென்னை, பெங்களூர், நாக்பூர் மற்றும் நாசிக் ஆகிய 5 நகரங்களுக்கு உரிய நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு பின்பு பெங்களுருக்கு ரூபாய் 30,399 கோடி, கொச்சி நகரத்திற்கு ரூபாய் 1957 கோடி, நாக்பூர் நகரத்திற்கு ரூபாய் 6708 கோடி, பூனே நகரத்திற்கு ரூபாய் 910 கோடி, தானே நகரத்திற்கு ரூபாய் 12,200 கோடி மதிப்பீடு கொண்ட திட்டங்களுக்கு ஒன்றிய அரசு Central Sector Project அடிப்படையிலேயே ஒப்புதல் வழங்கி உள்ளது. ஆனால் இதுவரை சென்னைக்கு எவ்வித நிதி ஒதுக்கீடும் ஒன்றிய அரசு செய்யவில்லை.
மேலும், 2024-25 ஆண்டின் நிதிநிலை அறிக்கையில் மகாராஷ்டிரம், புதுதில்லி, குஜராத், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கெல்லாம் உரிய நிதி மற்றும் சார்நிலைக்கடன் (Equity and Subordinate Debt) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசின் இந்த நிதி ஒதுக்கீடு பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. நடப்பாண்டு நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டிற்கு ஏன் மேற்குறிப்பிட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை? தமிழ்நாடு ஏன் மாற்றாந்தாய் பிள்ளையாக நடத்தப்படுகிறது? அரசியல் காரணங்களுக்காக பொது மக்கள் பாதிக்கப்படும் வகையில் திட்டங்களை தொய்வுப்படுத்தவும், மாநில அரசிற்கு நிதி நெருக்கடியை ஏற்படுத்தவும் இவ்வாறு செய்யப்படுகிறதோ என்று நமக்கு ஐயம் ஏற்படுகிறது.எனவே இந்த ஐயத்தை எல்லாம் போக்கும் வண்ணம் தமிழ்நாடு அரசின் நியாயமான கோரிக்கைளை ஏற்றும் இத்திட்டத்தினை தமிழ்நாடு அரசு சிறப்பாக நடைமுறைப்படுத்தி வருவதை கருத்தில் கொண்டும் ஏற்கனவே பொது முதலீட்டுக் குழு (PIB) பரிந்துரைத்துள்ளபடி தனது பங்கான ரூ.7,425 கோடியை ஒன்றிய அரசு வழங்கிட வேண்டுமென்றும், இத்திட்டத்தை Central Sector Project ஆக நடைமுறைப்படுத்துவதன் மூலம் தமிழ்நாடு அரசின் கடன் சுமையைக் குறைத்திட வழிவகை செய்திடவும், மாண்புமிகு ஒன்றிய நிதி அமைச்சரை கேட்டுக் கொள்கிறேன்.