1. Home
  2. தமிழ்நாடு

கனிமொழியையும் சிபிஐ விசாரிக்கும் போது பதறாத ஸ்டாலின் செந்தில்பாலாஜிக்காக பதறுவது ஏன்?- செல்லூர் ராஜூ..!

1

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜூ, “அண்ணாமலையின் நடைபயணத்தில் கலந்துக்கொள்வது குறித்து எங்கள் பொதுச்செயலாளர் தான் சொல்வார். என்.எல்.சி நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்து அதிமுக தான் மிகப்பெரிய போராட்டத்தை நடத்தியது. தன் ஆட்சி மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டுள்ளது என்பதை ஸ்டாலின் நன்கு அறிந்துள்ளார். எல்லா விலைவாசிகளும் ஏறிவிட்டது. பாட்டிலுக்கு 10 ரூபாய் உயர்த்திவிட்டார்கள். விஞ்ஞான ரீதியாக ஊழல் செய்யலாம் என்பதற்கு திமுக ஒரு எடுத்துக்காட்டு. பூச்சி பேர ஊழலில், கருணாநிதி ஊழல் செய்தார் என்பதை சர்க்காரியா கமிஷன் அன்றே சொல்லிவிட்டது. அதே வழியை இன்று ஸ்டாலின் பின்பற்றுகிறார். எல்லோருக்கும் ஆயிரம் ரூபாய் தருகிறோம் என்று தேர்தலின் போது சொன்னார்கள். செய்தார்களா? பல நிபந்தனைகளை விதித்துள்ளார்.

அதிமுக ஆட்சியில் அனைவருக்கும் கிரைண்டர், மிக்ஸி, மின்விசிரி, மாணவர்கள் அனைவருக்கும் லேப்டாப் உள்ளிட்டவற்றை எல்லாம் கொடுத்தோம். இன்று லேப்டாப் திட்டம், தாலிக்கு தங்கம் திட்டத்தை எல்லாம் நிறுத்திவிட்டார்கள். எந்த திட்டத்தையும் இவர்கள் கொடுக்காமல், ஏழரை லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு மக்கள் மீது கடன் சுமையை புகுத்தி இருக்கிறார்கள். அதிமுக இல்லாவிட்டால் திராவிட இயக்க உணர்வே தமிழ்நாட்டில் இல்லாமல் போயிருக்கும். திமுக தொண்டர்கள், நிர்வாகிகளே கொதித்துபோய் இருக்கிறார்கள். இவர் எங்களை அடிமை, கொத்தடிமை என்கிறார்.

மதுரைக்கு நிதியமைச்சர் பிடிஆர் ஒரு திட்டம் கூட செயல்படுத்தவில்லை.. செல்லூர்  ராஜு குற்றச்சாட்டு

திமுகவினர் தான் கொத்தடிமை. மத்தியில் நீங்கள் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது, முதல்வரின் மனைவியை சிபிஐ விசாரித்தது. கனிமொழியை திகார் சிறையில் அடைத்தார்கள். அப்படியும் கூட்டணியில் இருக்கிறார்கள். இப்போது சொல்லுங்கள், யார் கொத்தடிமை. கூடா நட்பு கேடாய் முடியும் என்று கருணாநிதி சொன்னார். ஆனால் ஈரோடு கிழக்கு தொகுதியில் 500 கோடியை செலவிட்டு ஈவிகேஎஸ் இளங்கோவனை வெற்றி பெற வைத்திருக்கிறார்கள். ஸ்டாலின் எழுதி கொடுத்ததை தான் வாசிப்பார். அவராக பேசுவது கிடையாது, பேசவும் அவருக்கு தெரியாது. அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது போல, திமுகவுக்கு எதை பார்த்தாலும் பயம் வந்துவிட்டது.

தயாளு அம்மாளை விசாரிக்கும்போது, கனிமொழியை கைது செய்தபோதும் கூட இப்படி யாரும் அவர்களை போய் பார்க்கவில்லை. ஆனால் செந்தில் பாலாஜிக்கு இவர்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்து, மருத்துவமனைக்கு சென்று வரிசையாக பார்க்கிறார்கள். என்ன காரணம்? பழனிவேல் தியாகராஜன் சொன்னது போல 30 ஆயிரம் கோடி ரூபாயை இவரது குடும்பம் சுருட்டிவிட்டது என்பதால், எங்கே செந்தில் பாலாஜி வாயை திறந்துவிட்டால் மாட்டிக்கொள்வோமோ என்று பயத்தில் போய் பார்க்கிறார்கள். நாங்களே இந்த ஆட்சி ஊழல் ஆட்சி, மக்கள் விரோத ஆட்சி என்று தான் சொல்கிறோம். சட்டப்பேரவையில் 3 மணி நேரம் எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார். அதையெல்லாம் வெளியே இந்த அரசு விடவில்லை. கோடநாடு வழக்கில் ஈடுபட்டதே திமுக தான். அதில் அரசியல் செய்வதற்காக ஓ.பி.எஸ் போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளார்” என்றார்.

Trending News

Latest News

You May Like