சாரி கேட்பதற்கு மு.க.ஸ்டாலினுக்கு முதல்வர் பதவி எதற்கு..? விஜய் பேச்சு!
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சென்னை சிவானந்தா சாலையில் இன்று (ஜூலை 13) போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்த்தில், முதல் முறையாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பங்கேற்று பேசியதாவது: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமாரை நகைத் திருட்டு வழக்கு தொடர்பாக போலீசார் தாக்கி கொலை செய்தனர். இதில், அஜித் குமாரின் குடும்பத்தினரிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் மன்னிப்பு கோரினார்.
இதேபோல, கடந்த 4 ஆண்டு கால திமுக ஆட்சியில் 24 காவல் நிலைய மரணங்கள் நிகழ்ந்துள்ளன. இவர்களின் குடும்பத்தினரிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் மன்னிப்பு கேட்டாரா. கேட்கவில்லை. எனவே, அவர்களிடமும் மன்னிப்பு கேட்டு விடுங்கள். அஜித்குமார் குடும்பத்தினருக்கு நிவாரணம் அளித்தது போல போலீசாரின் விசாரணையின் போது உயிரிழந்த 24 பேரின் குடும்பத்தினருக்கும் திமுக அரசு சார்பில் நிவாரணம் அளிக்கப்பட்டதா. இல்லை. இதேபோல, தூத்துக்குடி ஜெபராஜ், பென்னிக்ஸ் காவல் நிலைய மரண வழக்கை சிபிஐக்கு மாற்றப்பட்ட போது, தமிழகத்துக்கு பெரிய அவமானம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். அப்படியென்றால், அஜித் குமார் மரண வழக்கை சிபிஐக்கு மாற்றியது அவமானம் இல்லையா.
சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கு முதல் அஜித் குமார் காவல் நிலைய மரண வழக்கு வரை அனைத்து விவகாரங்களிலும் நீதிமன்றம் தலையிட்டு கேள்வி எழுப்பி உள்ளது. இப்படி, அனைத்து விவகாரங்களிலும் நீதிமன்றம் தலையிட்டு கேள்வி கேட்டால் தமிழகத்தில் மு.க.ஸ்டாலினுக்கு முதல்வர் பதவி எதற்கு. திமுக ஆட்சி எதற்கு. எப்படி கேள்வி கேட்டாலும் முதல்வரிடம் இருந்து எந்த பதிலும் வரப்போவதில்லை.
அவரிடமிருந்து வரும் ஒரே பதில் சாரிமா. தப்பு நடந்துருச்சிமா, நடக்கக்கூடாதது நடந்துருச்சுமா அவ்வளவு தான். இந்த வெற்று மாடல் திமுக அரசு, சாரிமா மாடல் சர்க்காரக மாறிவிட்டது. கடந்த நான்கு ஆண்டு கால திமுக ஆட்சியில் பல்வேறு அட்டூழியங்கள் நிகழ்ந்துள்ளன. தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை அமைக்க வேண்டும் என்று கேட்கப்பட்டுள்ளது. இதற்கு பயந்து பாஜகவின் பின்னால் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒளிந்துள்ளார் என பேசினார்.