இந்த மாதத்தில் பச்சை நிறம் மிகவும் முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது ஏன்..?
ஆடி மாதம் வடமாநிலங்களில் சாவன் மாதம் என்று அழைக்கப்படுகிறது. அந்த மாதம் முழுவதும் குறிப்பாக திங்கட் கிழமைகளில் அனைத்து சிவன் கோயில்களிலும் சிறப்பு அபிஷேகம் மற்றும் பிரார்த்தனைகள் நடத்தப்படுகின்றது. இந்த மாதத்தில் கங்கையிலிருந்து புனித நீரெடுத்து, தங்களது ஊரில் உள்ள சிவன் கோயிலில் உள்ள சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்கின்றனர்.
வடமாநிலங்களில் சாவன் மாதம் முழுவதும் சிவபெருமானுக்கு முக்கியத்துவம் அளித்து வழிபாடுகளில் கூடுதல் கவனம் செலுத்துகின்றனர். அந்த மாதம் முழுவதும் சிவபக்தர்கள் சிவபெருமானைப் பக்தியோடு பூஜித்து வழிபடுகின்றனர். மாதாமாதம் வரும் சிவராத்திரியை விட பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் வரும் மகா சிவராத்திரி மிகவும் விசேஷமானது. உத்தரகண்ட் மாநிலத்தில் சாவன் மாத சிவராத்திரி மிகவும் விஷேசமாகக் கொண்டாடப்படுகிறது.
சாவன் மாதத்தில் பச்சை நிறம் மிகவும் முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. பச்சை நிற புடவைகள், சுடிதார் உள்ளிட்ட உடைகளை அணிவது மங்களகரமாக பார்க்கப்படுகிறது. இந்த பழக்கம் இயற்கையுடனான தொடர்பை குறிக்கிறது.சாவன் மாதம் பச்சை நிறத்துடன் ஆழமாக இணைக்கப்பட்டுள்ளது. இது பருவமழை காரணமாக செழித்து வளரும் பசுமையை குறிக்கிறது. செழிப்பு மற்றும் இயற்கையை உள்ளடக்கிய சிவபெருமானுக்கும், பார்வதிக்கும் இடையிலான தெய்வீக அன்பை குறிக்கிறது.
திருமணமானவர்கள் பச்சை ஆடை அணிந்து, பெண்கள் பச்சை வளையல்கள் அணிந்து சிவனையும், பார்வதியும் வழிபடுவது சிறந்த பலனை கொடுக்கும். மேலும் உங்களது திருமண வாழ்க்கையில் பச்சை போன்று செழிப்பும், மகிழ்ச்சியும் அதிகரிக்கும் எனவும் கருதப்படுகிறது.இந்த மாதத்தில் விரதம் இருப்பதன் மூலம் சிவனின் ஆசிர்வாதத்தை நிச்சயம் பெறலாம் என புராணங்கள் கூறுகிறது. விரதத்தின் பலனாக கேட்டது கிடைக்கும் என்பது மக்களின் நம்பிக்கையாகும்.